Published : 21 Jun 2022 06:33 AM
Last Updated : 21 Jun 2022 06:33 AM

செஸ் ஒலிம்பியாட் போட்டி வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மருத்துவக் காப்பீடு: சிவ.வீ.மெய்யநாதன் அமைச்சர் தகவல்

மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கு கூடுதலாக அமைக்கப்பட்டு வரும் அரங்கப் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

மாமல்லபுரம்: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு, 15 நாட்களுக்கு தலாரூ.2 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேசஒலிம்பியாட் செஸ் போட்டிகள் தனியார் நட்சத்திர விடுதியில் ஜூலை 28-ம் முதல் ஆக.10-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில், 187 நாடுகளில் இருந்து 2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று போட்டி நடைபெற உள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். போட்டி நடைபெற உள்ள விடுதி மற்றும் மாற்று ஏற்பாடாக அமைக்கப்பட்டு வரும் மற்றொரு விளையாட்டு திடல், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

விசா நடைமுறைகள்

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது: சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கூடுதலாக ஒரு களம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 22 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த அரங்கில், போட்டிக்காக 700 செஸ் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 127 நாடுகளின் வீரர்களுக்கான விசா நடைமுறை பணிகள் நிறைவடைந்துள்ளன.

கரோனா பெருந்தொற்றை தடுப்பதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீரர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மேலும், போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களுக்கும்தமிழக அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு அறிமுகப்படுத்தியுள்ளோம். செஸ் போட்டிக்கான ஒலிம்பிக் சுடர் நாட்டில் உள்ள 75 முக்கிய நகரங்களுக்குச் சென்று திரும்பியபின், வரும் ஜூலை 28-ம்தேதி தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

சிறப்பானமுறையில் போட்டி நடைபெறுவதற்காக 19 உயர் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து, தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x