உடையார்பாளையம் வாரச் சந்தைக்கு சிமென்ட் தளம்: மழை, வெயில் தாளாமல் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

உடையார்பாளையம் வாரச் சந்தையில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், சாக்குகளைக் கொண்டு கொட்டகை அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள்.
உடையார்பாளையம் வாரச் சந்தையில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், சாக்குகளைக் கொண்டு கொட்டகை அமைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள்.
Updated on
2 min read

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் வாரச் சந்தை நடைபெறும் இடத்தில், சிமென்ட் தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.3 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.

உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே உடையார்பாளையம் பேரூராட்சிக்குச் சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் இடம் உள்ளது. இங்கு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.

வாரந்தோறும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த வாரச்சந்தையில் காய்கறி, பழங்கள், மளிகை, இரும்பு உட்பட 100-க்கும் அதிகமான கடைகள் அமைக்கப்படும்.

அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சாவூர், பெரம்பலூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர். ரூ.10 லட்சம் வரை வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் இங்கு வியாபாரிகளுக்காக கம்பி ஊன்றி, ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் மட்டும் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால்,ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் சேதமடைந்து உடைந்து, திறந்தவெளி கடைகளாக மாறின. அதன் பிறகு, வாரச் சந்தை இடத்தை மேம்படுத்தவோ, கொட்டகைகள் அமைக்கவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால், வியாபாரிகள் சாக்குகளைக் கொண்டு தற்காலிக கொட்டகைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், வெயில் மற்றும் மழைக் காலங்களில் தங்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக வியாபாரிகள் கூறியது: வாரத்தில் ஒரு நாள் நடைபெறும் சந்தையில் ரூ.10 லட்சத்துக்கு வியாபாரம் நடைபெறும். கொட்டகை இல்லாததால் சாக்குகளைக் கொண்டு தற்காலிக கொட்டகை அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம். மின் விளக்கு வசதி இல்லாததால், பேட்டரியில் இயங்கும் குறைந்த ஒளி விளக்குகளை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறோம். அதேபோல, கழிப்பிடமும் இல்லாததால், அருகில் உள்ள குளக் கரையை திறந்தவெளிக் கழிப்பிடமாக அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர்.

வெயில் காலத்தை சமாளித்து வியாபாரம் செய்து வரும் நிலையில், மழை பெய்யும் நேரத்தில் பல்வேறு சிரமங்கள் நேரிடுகின்றன. சாக்குப்பை கொட்டகைகளில் மழைநீர் கசிந்து காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் நனைந்து பெரும் சேதம் ஏற்படுகிறது. மேலும், சந்தை முழுவதும் மண் தரையாக இருப்பதால், முழு இடமும் சேறும் சகதியுமாகிவிடுகிறது.

கடைகளுக்கு அருகே மழைநீர் குளம்போல தேங்கி, வியாபாரம் கெடுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகவும் காரணமாக உள்ளது.

வாரச்சந்தையை ஏலம் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகளுக்கோ, பொதுமக்களுக்கோ தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை. எனவே, வாரச்சந்தை நடைபெறும் இடத்தை உடனடியாக சுத்தப்படுத்தி, சிமென்ட் தளம் அமைத்து, உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியது:

உடையார்பாளையம் வாரச் சந்தையில் நிழற்குடை, வடிகால் வசதி உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த பேரூராட்சி சார்பில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in