Published : 08 May 2016 10:44 AM
Last Updated : 08 May 2016 10:44 AM

மக்களை சென்றடைய விரும்பாத தலைவர்கள்: மோடி, ஜெயலலிதா பற்றி கோவையில் ராகுல் விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஜெயலலிதாவும் மக்களைச் சென்றடைய விரும்பாத தலைவர்களாக இருக்கிறார்கள். அனைத்து பிரச்சினைகளுக்கும் தங்களிடமே பதில் இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள் என கோவை பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி விமர்சனம் செய்தார்.

திமுக, காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக்கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது. அதில் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:

தமிழகத்தின் ஜீவன் காவிரி. குடிக்கும் நீராகட்டும், விவசாயமாகட்டும் பெரும்பாலான தமிழ் மக்கள் காவிரி நீரைத்தான் பயன்படுத்துகிறார்கள். பல பெருமைகளைக் கொண்டுள்ள அந்த நதி அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. எதிர்காலத்தையும் தந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு கொடுத்துவைத்த மாநிலம். ஏனென்றால் காவிரி நதியைப் போன்ற சிறந்த தலைவர்களை தமிழகம் கொண்டுள்ளது. இங்குள்ள தலைவர்கள் தங்களை தாழ்த்திக் கொள்பவர்களாகவும், மக்களுக்காக பணியாற்றுபவர்களாகவும் உள்ளார்கள். அதற்கு உதாரணம் காமராஜர், எம்ஜிஆர், கருணாநிதி போன்றோர். இந்த தலைவர்கள் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு கட்சி பேதம் பார்க்காமல் தொண்டாற்றினார்கள். காமராஜர் அனைத்து கிராமத்திலும் பள்ளிக்கூடம் திறக்க வேண்டுமென்றதை அதிகாரிகள், அனுபவம் மிக்கவர்கள் அன்று தேவையற்ற எண்ணம் என்றார்கள். ஆனால் காமராஜரோ ஏழை மகனின் அறிவை அவர் மெச்சினார். அவர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தைத்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் பின்னாளில் நாடு முழுவதும் கொண்டு வந்தது. இங்கு மற்றொரு வகை தலைவரும் இருக்கிறார். அவர் மக்களைச் சென்றடைய விரும்பாதவர். ஏழை மக்கள் அறிவுள்ளவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர், அனைத்து பிரச்சினைக்கும் தன்னிடமே பதில் இருப்பதாக நினைப்பவர். இந்தியப் பிரதமரும், தமிழக முதல்வரும் இந்த வகைத் தலைவர்கள்தான். எல்லாமும் தெரிந்ததாக கூறிக் கொண்டு, தொழிலாளர்களை சந்தித்து பேசாமல், நலிந்துகொண்டிருக்கும் நகை வியாபாரிகளை சந்தித்து பேசாமல் இருக்கும் தலைவர்கள் அவர்கள். இது ஜனநாயக நாடு. இங்கு மக்கள் குறைகள் கேட்கப்பட வேண்டும். இதேபோன்ற நிலைதான் நாடாளுமன்றத்திலும் நிலவுகிறது. அங்கு விவாதம் நடப்பதில்லை. உறுப்பினர்கள் குரல்வளை நெரிக்கப்படுகிறது.

ஜெயலலிதா ஐந்தாயிரம் ரூபாய்க்கு பரிசுப் பொருட்களை கொடுப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.65000 வரை கடன் சுமையை கூறவில்லை. 90 சதவீத தலித்துகள் சொந்தமாக சிறிய இடம் இல்லாமல் இருப்பதையும் 94 லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதையும் கூறவில்லை. அதேபோல 1800 மதுக்கடைகளை 6800 ஆக உயர்த்துவேன் என்பதையும், மதுவால் அழியும் ஆயிரக்கணக்கான பெண்களை உருவாக்குவேன் என்பதையும் அவர் கூறவில்லை.

காங்கிரஸ், திமுக கூட்டணித் தலைவர்கள் கதவுக்கு பின்னால் அமர்ந்திருப்பவர்கள் அல்ல. சென்னை வெள்ளப்பெருக்கின்போது மக்களை நேரடியாகச் சந்தித்து, அந்த மக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றப் போராடியவர்கள். நாங்கள் உருவாக்க இருக்கும் தலைமை, காமராஜரைப் போன்ற தலைமையாக இருக்கும். அது ஏழை, எளிய மக்களைச் சந்தித்து உதவும் தலைமையாகவும், கடன்களை ரத்து செய்து விவசாயிகளைக் காக்கும் தலைமையாகவும், 60 வயதைத் தாண்டியவர்களுக்கு பென்சன் கொடுக்கும் தலைமையாகவும், தமிழகத்தை உற்பத்தி மையமாக்கும் தலைமையாகவும் இருக்கும். லஞ்சம் லாவண்யமற்ற நிர்வாகமும், ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கையையும் இந்த தலைமை எடுக்கும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக், குஷ்பு, திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 10,000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.

‘230 தொகுதிகளில் கூட்டணி வெல்லும்’

ஒரு காலத்தில் அடக்கம் இல்லாத ஒருவரது ஆதரவுப் பகுதியாக கோவை இருந்ததாகக் கூறுவார்கள். ஆனால் இந்த முறை திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாறு காணாத அளவு மக்கள் வெற்றியைக் கொடுப்பார்கள். 234 தொகுதிகளில் 4 தொகுதிகளை வேண்டுமானால் அவர்களுக்கு விட்டுவிடலாம்.

மீதமுள்ள 230 தொகுதிகளில் நமது கூட்டணி தான் வெற்றி பெறும். மீண்டும் வெற்றி விழாவில் உங்களைச் சந்திக்கிறேன்.

‘புதிய கட்டிடத்துக்கு சட்டப்பேரவை மாறும்’

நாட்டில் அடிப்படை உரிமைக்கும், மாணவர் சமுதாயத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் போர்க்குரலாக ஒலிப்பது, காங்கிரஸ், திமுக குரல்களே. ஸ்டலினும், ராகுல்காந்தியும் மக்களை தேடிச் சென்று சந்திக்கும் தலைவர்கள். 6-வது முறையாக கருணாநிதி முதல்வராக பதவியேற்கும் நிகழ்வில் ராகுல்காந்தி பங்கேற்க வேண்டுமென வரவேற்கிறேன். அதிமுக தேர்தல் அறிக்கை, இலவசங்களின் தோரணம். அவை பெரும்பாலும் திமுகவின் திட்டங்களை பார்த்து எழுதப்பட்டவையே. ரூ.4 லட்சம் கோடி கடன் சுமை இருந்தும் இவ்வளவு இலவசம் அறிவிக்கிறார்கள் என்றால், அதை எப்படி செயல்படுத்துவார்கள் என்ற கேள்வி மக்களுக்கு எழுந்துள்ளது. ஜெயலலிதா 2011-ல் கோவைக்கு மோனோ ரயில் வரும் என்றார். இப்போதும் அதையே கூறுகிறார். அடுத்த தேர்தல் வந்தாலும் அதையே கூறுவார். அவர் ஒருமுறை சொல்வதை மறுமுறை மாற்றிப் பேசமாட்டார். மக்களிடமிருந்து விலகி இருக்கக்கூடிய முதல்வர் எதற்கு என நாம் கேள்வி கேட்கவேண்டும். அவரை அணுக முடியாத தூரத்தில் கொண்டு போய் வைக்க வேண்டும். அவர் கொடநாட்டில் ஓய்வு எடுப்பதுதான் அனைவருக்கும் நல்லது. திமுக கூட்டணி ஆட்சி வந்ததும் ஏற்கெனவே கட்டிய புதிய கட்டிடத்துக்கு சட்டப்பேரவை மாற்றப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x