Published : 21 Jun 2022 06:04 AM
Last Updated : 21 Jun 2022 06:04 AM
ஆம்பூர்: ஆம்பூர் அருகே இரு மாநில எல்லைகளை இணைக்கும் பழைய ராணுவ சாலையை ஆம்பூர் சட்டப் பேரவை உறுப்பினர் அ.செ.வில்வ நாதன் நேற்று ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் வெங்கட சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ராலக் கொத்தூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமகுப்பம் 89 பெத்தூர் வரை கவுண்டன்யா வனவிலங்குகள் சரணாலயம் காப்புக்காடுகள் வழியாக பழைய ராணுவ சாலை இயங்கி வந்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த ராணுவ சாலையில் கொண்டை ஊசி வளைவுகள், மைல் கற்கள், சாலை யில் பயணிப்போர் ஆங்காங்கே இளைப்பாற சுமைதாங்கி கற்கள், சாலையில் பயணிப்போர் தண்ணீர் தேவைகளை தீர்த்துக்கொள்ள தொட்டி கிணறு, ரெட்டி கிணறு, சிலா மரத்து ஓடை போன்ற நீர்நிலைகள் ஆங்காங்கே ராணுவ சாலையில் உள்ளன.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் ராமகுப்பம் மண்டலம், குப்பம் மண்டலம், குடிபல்லி மண்டலம் பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும், கர்நாடக மாநிலம், கோலார் மற்றும் சிக்கபலாபூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும், தமிழகப் பகுதியில் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் இந்த ராணுவ சாலையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளனர்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த ராணுவ சாலையில், யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமானதால் பொதுமக்கள் இந்த சாலையைப் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்தது.
தமிழகம்-ஆந்திர மாநில மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பழைய ராணுவ சாலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் அ.செ.வில்வநாதன், ஆந்திர மாநில வாரிய (வன்னியர் குல சத்திரியர்) தலைவர் வனிதா சீனு தலைமை யிலான குழுவினர் நேற்று பழைய ராணுவ சாலையை ஆய்வு செய்தனர்.
89 பெத்தூர் அருகே வனப் பகுதி வழியாக பாலாமணி நெட்டு, தொட்டி கிணறு, சிலாமரத்து ஓடை, தொட்டி மடுவு, சுட்டக்குண்டா வழியாக இரு சக்கர வாகனங்களிலும் நடைபயணமாக ஆய்வு குழுவினர் சென்று ஆய்வு நடத்தினர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ராணுவ சாலையானது ஆம்பூர் அருகே வெங்கடசமுத்திரம் கூட்டுரோடு, ராலக்கொத்தூர், ஜல்தி, இடையன் கல் , ரெட்டி கிணறு, சுட்டக்குண்டா, தொட்டி மடுவு, சிலாமரத்து ஓடை, பாலாமணி நெட்டு வழியாக 89 தந்தூர் வரை செல்லும் இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
இந்த பழைய ராணுவ சாலை புதுப்பிக்கப்பட்டால் பயண நேரமும், தூரமும் குறையும். ஆம்பூரில் இருந்து ஆந்திரா, கர்நாடகா மாநில பகுதிகளுக்கு விரைவில் சென்றடைய முடியும். மேலும், நன்னியாலா கும்கி யானைகள் முகாம், சூழல் சுற்றுலா பூங்கா, குப்பத்தில் உள்ள திராவிடன் பல்கலைக்கழகம், குடிவொங்கா சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கும் செல்ல பயன் உள்ளதாக இருக்கும்" என்றனர்.
வனப்பகுதி சாலை ஆய்வின் போது திருப்பத்தூர் மாவட்ட திட்ட இயக்குநர் செல்வராசு, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ( வ.ஊ ) கலீல், உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, ஒன்றிய செயற் பொறியாளர் ஜூலியா தங்கம், சாலை ஆய்வாளர் அருள்செல்வி, காரப்பட்டு ஒன்றியக் குழு உறுப்பினர் செந்தில், அரங்கல்துருகம் ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி ஜெயராஜ்.
ஆந்திர மாநில ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் குப்பம் ஒன்றிய செயலாளர் மல்லானூர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வெங்கட் ரமணா, 89 பெத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தப்பா, ஆந்திர வனத்துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், நரேந்திரன், தமிழக வனத் துறையைச் சேர்ந்த ராஜ்குமார், சக்தி ஆகியோர் உடனிருந்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT