Published : 20 Jun 2022 04:42 PM
Last Updated : 20 Jun 2022 04:42 PM

10, +2 தேர்ச்சி விகிதத்தில் வடதமிழகம் பின்னடைவு: சிறப்புத் திட்டத்துக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், தேர்ச்சி விகிதத்தில் வடக்கு மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டமும் முதலிடம் பிடித்துள்ளன. அந்த மாவட்டங்களுக்கும், தேர்ச்சியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் அதை எண்ணி கவலை கொள்ளாமல், அடுத்து வரும் துணைத் தேர்வுகளை சிறப்பாக எழுதி வெற்றி பெற்று உயர்கல்வி பயில எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுத்தேர்வு முடிவுகளில் கவலையளிக்கும் அம்சம் வடக்கு மாவட்டங்களும், காவிரி பாசனப்பகுதி மாவட்டங்களும் தேர்ச்சி விகிகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பது தான். இரு தேர்வுகளிலும் வேலூர் மாவட்டம் தான் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. 12-ஆம் வகுப்பைப் பொறுத்தவரை திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பத்தூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகியவை தான் கடைசி 10 இடங்களைப் பிடித்த பிற மாவட்டங்கள் ஆகும். இவற்றில் திண்டுக்கல், புதுக்கோட்டை ஆகியவற்றைத் தவிர மற்றவை வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்கள்.

அதேபோல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கடைசி 10 இடங்களைப் பிடித்த மாவட்டங்கள் பட்டியலில் திண்டுக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, திருவாரூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருப்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருப்பூர் தவிர மீதமுள்ளவை காவிரி டெல்டா மற்றும் வடக்கு மாவட்டங்கள் என்பது வருத்தமளிக்கிறது.

கடந்த காலங்களில் இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த அரியலூர், தருமபுரி, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் இந்த முறை சற்று முன்னேறியிருப்பது ஓரளவுக்கு மனநிறைவு அளிக்கிறது. ஆனாலும் கூட, அந்த மாவட்டங்கள் கல்வியில் சொல்லிக்கொள்ளும்படி வளர்ச்சியடைடவில்லை. மாறாக, புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பிறகு இப்போது தான் முதன்முறையாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த காலங்களில், கடைசி 10 இடங்களில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம், ஓரிடத்தை மட்டுமே பிடித்திருந்த நிலையில், அப்போது மூன்றாக பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டம் மூன்று இடங்களைக் கைப்பற்றிருப்பதால் தான் மற்ற மாவட்டங்கள் முன்னேறியிருப்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. இதை சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் கல்வி வளர்ச்சியாக கருதமுடியாது.

கடந்த காலங்களில் கடைசி வரிசையில் இருந்த திருவண்ணாமலை, பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 7-ஆவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. ஆனால், 12-ஆம் வகுப்புத் தேர்வில் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் 37&ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், 12-ஆம் வகுப்புத் தேர்வில் எட்டாவது இடத்தைப் பிடித்த அரியலூர் மாவட்டம் பத்தாம் பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் 13-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால், ஒரு காலத்தில் தேர்ச்சி விகிதத்தில் முதல் 3 இடங்களில் வந்த தலைநகர் சென்னை, இப்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 26-ஆவது இடத்திற்கும், 12-ஆம் வகுப்பு தேர்ச்சியில் 18-ஆவது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பது தான். இந்த புள்ளி விவரங்கள் மீண்டும், மீண்டும் சொல்லும் உண்மை என்னவெனில், வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கல்வி வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமெனில் அங்கு அதிரடியான மாற்றங்களை செய்ய வேண்டும் என்பதைத் தான்.

கல்வியில் வட மாவட்டங்கள் பின்தங்கியிருப்பது இப்போது ஏற்பட்ட சிக்கல் அல்ல. காலம் காலமாகவே அந்த மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி தான் உள்ளன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக நான் வலியுறுத்தி வரும் போதிலும் கூட, அதற்காக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தான் உண்மை. இப்போதும் கூட தமிழகத்தில் உள்ள 3800 ஓராசிரியர் பள்ளிகளில் பெரும்பாலானவை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் உள்ளன. அதனால் தான் வடமாவட்டங்கள் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக உள்ளன என்பதை எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த சிக்கலுக்கு அரசு என்ன தீர்வை வைத்திருக்கிறது? என்ற கேள்விக்குத் தான் ஆட்சியாளர்களிடம் பதில் இல்லை.

தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள வட மாவட்டங்களைச் சேர்ந்த 44 வட்டங்களில் கல்வி வளர்ச்சிக்கான சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால், வட மாவட்டங்களின் கல்வி பின்னடைவுடன் ஒப்பிடும் போது, இது யானைப் பசிக்கு சோளப்பொரியாகவே அமையும். எனவே, வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களை கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, அந்த மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர், உயர்வகுப்புகளில் பாடத்திற்கு ஓர் ஆசிரியரை நியமித்தல், மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கூறுகளை உள்ளடக்கிய சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x