

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்திய பத்திரிக்கை கழகம், புகையிலை கட்டுப்பாட்டுக்கான ஆதார மையம், புற்றுநோய் கழகம் மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அவசர தேவைக்கான நல நிதியம் (யுனிசெஃப்) ஆகியவை சார்பில் புகையிலை கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நாளை (மே 31) சென்னை தரமணி இந்திய பத்திரிகை கழக வளாகத்தில் நடக்கிறது.
நிகழ்ச்சியில் இந்திய பத்திரிக்கை கழகத்தின் இயக்குநர் சசி நாயர் வரவேற்று பேசுகிறார். புற்றுநோய் கழக மருத்துவர் வி.சாந்தா, யுனிசெஃப் தலைமை கள அலுவலர் ஜோப் ஜக்காரியா, புற்றுநோய் கழக உதவி துணைத் தலைவர் ஹேமந்த் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர். புகையிலைப் பொருட்கள் பழக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து யுனிசெஃப் அமைப்பின் சுகதாராய் பேசுகிறார்.
புகையிலைப் பொருட்களை கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் நிலை என்ன என்பது குறித்து புற்றுநோய் கழகத்தின் உதவிப் பேராசிரியர் மருத்துவர் விதுபாலா பேசுகிறார். புகையிலைப் பொருட்களை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தைசாமி பேசுகிறார்.