Published : 20 Jun 2022 07:04 AM
Last Updated : 20 Jun 2022 07:04 AM
சென்னை: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக மாநிலம் அணை கட்டத் திட்டமிட்டிருப்பதைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வரும் 22-ம் தேதி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றுவிவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலர் பெ.சண்முகம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலர் (பாலன் இல்லம்) என்.பெரியசாமி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலப் பொதுச் செயலர் வி.அமிர்தலிங்கம் உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அம்மாநிலத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதால்தான், மேகேதாட்டு அணை கட்டுமானத் திட்ட அறிக்கை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க மத்தியநீர்வளத் துறை அமைச்சகம்அனுமதி கொடுத்துள்ளது.
காவிரி நதிநீர் ஆய்வு என்ற பெயரில் தமிழ்நாட்டுக்கே வந்து, மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடகம் கொடுத்துள்ள வரைவுஅறிக்கை கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளது கண்டனத்துக்குரியது.
காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஆணையத் தலைவரைக் கண்டித்தும், வரும் 23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மேகேதாட்டு அணை குறித்த விவாதப் பொருளை நீக்கஅவசர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வரும் 22-ம் தேதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டத் தலைநகரங்களில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் கோரிக்கை
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மேகேதாட்டு அணை கட்டப்படுவது குறித்து விவாதிக்கப் போகிறோம் என்று மேலாண்மை ஆணையத் தலைவர்கூறுவது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேட்டூர் அணை, கல்லணையில் காவிரி மேலாண்மை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது விவசாயிகளிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகேதாட்டு அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு திறந்து விடப்படும் நீரின் அளவு வெகுவாக குறையும்.
எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை கட்டுதல் குறித்து விவாதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். அதையும் மீறி அந்தப் பொருள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமேயானால், இந்தப் பொருள் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதையும், ஆணையத்தின் ஆய்வு வரம்பில் ‘மேகேதாட்டு அணை’ இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மேகேதாட்டு திட்டத்தை அனுமதிக்க நடவடிக்கை எடுத்து வரும் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர்ஹெல்தரை, பதவியில் இருந்து நீக்க, மத்திய அரசுக்கு தமிழகஅரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.
மேகேதாட்டு அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு விடப்படும் நீரின் அளவு வெகுவாக குறையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT