Published : 30 May 2022 07:21 AM
Last Updated : 30 May 2022 07:21 AM

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு தேவை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமர்சேவா சங்க ஆண்டு விழாவில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாற்றுத் திறன் பெண்ணுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசளித்து கவுரவித்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பி.ஆகாஷ், அமர்சேவா சங்க நிறுவனத் தலைவர் எஸ். ராமகிருஷ்ணன், செயலாளர் சங்கர ராமன் உள்ளிட்டோர்.

தென்காசி: “மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு தேவை”என தென்காசி அருகே அமர்சேவா சங்க ஆண்டு விழாவில் தமிழகஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள அமர்சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை செய்து வரும் அமர் சேவாசங்கத்தின் தொண்டுகள் பாராட்டுக்குரியவை. பல ஆயிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகளுக்குதன்னம்பிக்கையை அளித்து, அவர்கள் சுயமரியாதையுடன் வாழவும் அமர்சேவா சங்கம் சிறந்த சேவையை செய்து வருகிறது. தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டகிராமங்களில் மாற்றுத் திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

மாற்றுத் திறனாளிகள் இந்த சமுதாயத்தில் மற்ற மக்களைப்போல் வாழ வேண்டும். அவர்களை சக மனிதராக மதிக்க வேண்டும். மனித குலத்துக்கு சேவை செய்வதே சனாதன தர்மத்தில் உயர்ந்த தர்மம். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் குறித்து சமூகத்தில் அதிகமான விழிப்புணர்வு தேவை.

நாடாளுமன்றத்தில் 2016-ம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம் இயற்றிய போதும், அது பற்றிய தேவையான விழிப்புணர்வு இன்னமும் ஏற்படவில்லை. மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்து அரசு எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதைசெயல்படுத்துவதில் இன்னும் பலரிடம் மெத்தனப்போக்கு உள்ளது.

மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின்படி மாற்றுத் திறனாளிகளுக்கு எந்த ஒரு பள்ளியிலும் சேர்க்கை வழங்க வேண்டும். ஆனால், சிலபள்ளிகளில் அவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்படுவது வேதனையானது. மாற்றுத் திறனாளிகள் அவர்களது இலக்குகளை அடைய ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

அமர்சேவா சங்க நிறுவனத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், செயலாளர் எஸ்.சங்கர ராமன், தென்காசி ஆட்சியர் பி.ஆகாஷ், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x