

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக இருப்பவர் க.மணிகண்டன்(49). இவர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.
மணிகண்டன், தனது பிறந்த நாளான ஜூன் 16-ம் தேதி, பள்ளிவகுப்பறையில் தலைமை ஆசிரியை சித்ராதேவி மற்றும் சக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டினார். அப்போது, மணிகண்டனுக்கு தலைமை ஆசிரியை சித்ராதேவி கேக் ஊட்டியுள்ளார்.
இந்த நிகழ்வின்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பரவின.
இந்நிலையில், தலைமை ஆசிரியை சித்ராதேவி, ஆசிரியர்மணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆசிரியர் மணிகண்டன் கூறும்போது, ‘‘எனது பிறந்த நாளையொட்டி, மாணவ,மாணவிகளின் வேண்டுகோளுக்கிணங்க வகுப்பறையில் கேக் வெட்டினோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்ததை சிலர் சர்ச்சையாக்கி விட்டனர்’’ என்று கூறினார்.