Published : 20 Jun 2022 06:37 AM
Last Updated : 20 Jun 2022 06:37 AM
தருமபுரி: வெளிநாட்டு தலைவர்களுக்கு தெய்வ விக்கிரகங்களை பரிசாக வழங்கக் கூடாது என தருமபுரியில் காவல்துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் தலைவர் பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.
தருமபுரியில் மாவட்ட உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் சிவபூஜை, அம்மையப்பர் திருக்கல்யாண உற்ஸவம் மற்றும்உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது.
விழாவுக்கு, மாநில நிர்வாகத் தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். தொழிலதிபர் டிஎன்சி மணிவண்ணன், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவ ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், மத் ராஜ சரவண மாணிக்கவாசக பரமாச்சாரிய சுவாமி பங்கேற்று சிவனடியார்களுக்கு அருளாசி வழங்கி பேசினார். விழாவில், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் மாநில தலைமை ஆலோசகரும், ஓய்வுபெற்ற ஐஜி-யுமான பொன் மாணிக்கவேல், சிவனடியார்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். விழாவில், மாநில நிர்வாகிகள் பொன்ராஜ், ஜம்புலிங்கம், மாவட்ட தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.
மாயமான விக்கிரகங்கள்
முன்னதாக பொன். மாணிக்க வேல், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தஞ்சாவூர் மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தில் உள்ள பழமையான சிவன் கோயிலில் இருந்த உமா மகேஸ்வரி விக்கிரகத்தை கடந்த 1960-ம் ஆண்டு இங்கிலாந்து ராணிக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.
அந்த சிலை அந்த நாட்டில் உள்ள அரண்மனையில் உள்ளது. பரிசாகக் கொடுத்த அந்த சிலையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டு தலைவர்களுக்கு தெய்வ விக்கிரகங்களை பரிசாக வழங்கக் கூடாது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது. அப்படி தெய்வ விக்கிரகங்கள் வழங்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகம் முழுவதும் 26 ஆயிரம்கோயில்கள் உள்ளன. எதிர்காலத்தில், இக்கோயில்களில் அர்ச்சகர்கள் இல்லாத நிலை உருவாகும். இங்குள்ள அர்ச்சகர்கள் குறைந்த ஊதியத்தை பெற்று வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுக்கும், கோயில் பணியாளர்களுக்கும் அரசு உடனடியாக ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து மீட்கப்பட்ட தெய்வ விக்கிரகங்களை அருங்காட்சியகத்தில் வைக்காமல் தொடர்புடைய கோயிலிலேயே வைக்க நடவடிக்கை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகக் கோயில்களில் இருந்து மாயமான தெய்வ விக்கிரகங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT