Published : 20 Jun 2022 06:33 AM
Last Updated : 20 Jun 2022 06:33 AM

போக்குவரத்து கழகங்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்: அறக்கட்டளை குழுவிடம் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த அரசு நிதி வழங்க வேண்டும் என ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி குழுவினரிடம் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி’ என்ற பெயரிலான அறக்கட்டளையின் மூலதனத்தை வலுப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகளை தொழிற்சங்க பிரதிநிதிகள் இக்குழுவிடம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இக்குழுவின் 2-வது கூட்டம் போக்குவரத்து துறை செயலர் கே.கோபால் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சமீபத்தில் நடந்தது.

இதில் எல்பிஎப், சிஐடியு, ஏடிபி, டிடிஎஸ்எப் தொழிற்சங்கங்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

போக்குவரத்து கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடியை சரிசெய்யாவிட்டால், ஓய்வூதிய பிரச்சினை நீடித்துக்கொண்டுதான் இருக்கும். நிதி நெருக்கடியை காரணம் காட்டி, ஓய்வுபெற்ற ஊழியர்களின் பணப் பலன்களை நிறுத்துவது நியாயமற்றது. அவர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு காலப் பணப் பலன்களையும் வழங்க வேண்டும்.

தற்போது பெண்கள் கட்டணமின்றி பயணிக்கும் 7,300 பேருந்துகளில் சராசரியாக ரூ.7 ஆயிரம் மட்டுமே வருவாயாக கிடைக்கிறது. எனவே, இப்பேருந்துகளின் இயக்கச் செலவை முழுமையாக அரசு ஏற்க வேண்டும். இதேபோல, மற்ற பயணச் சலுகைக்கான முழு தொகையையும் அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு, மாணவர்கள், பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், மலைவழித் தடங்களில் பேருந்துகள் இயக்கம் போன்றவை மூலம் கடந்த 30 ஆண்டுகளில் மாநிலத்தின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. அரசுக்கு போக்குவரத்து கழகங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வரி வருவாய் கிடைக்கிறது.

எனவே, போக்குவரத்து கழகங்களால் அரசுக்கு வருமானமே தவிர, இழப்பு அல்ல. போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த அரசு நிதி வழங்குவதோடு, மாற்றுத் திட்டங்களையும் பரிசீலிக்க வேண்டும். இவை உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகள், ஓய்வூதிய நிதி பொறுப்பாட்சி குழுவினரிடம் முன்வைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x