சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு: நடைமேடை டிக்கெட் விநியோகம் நிறுத்தம்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு: நடைமேடை டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
Updated on
1 min read

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்களுக்கான இளைஞர் அமைப்பு அறிவித்தையடுத்து, இந்த ரயில் நிலையம் முழுவதும் ஆர்.பி.எஃப். காவலர்கள், தமிழக ரயில்வே காவலர்கள் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிலையத்தில் தேவையில்லாமல் மக்கள் குவிவதைத் தடுக்கும் விதமாக, சென்ட்ரல், எழும்பூர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விநியோகம் இன்று (ஜூன் 20) மாலை வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, எழும்பூர், தாம்பரம் உட்பட முக்கிய ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள்,மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல, சென்னையிலும் இளைஞர்கள் கடந்த 18-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்களுக்கான இளைஞர்கள் (ஒய்எஃப்பி) அமைப்பு அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நேற்று காலை முதல் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

குறிப்பாக, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எஃப். காவலர்கள், தமிழக ரயில்வே காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில்நிலையத்தில் பயணிகள் தவிர, மற்ற நபர்கள் வெளியேற்றப்பட்டனர். பயணிகள் வந்து செல்லும் முக்கிய நுழைவு வாயில்கள் தவிர, மற்ற நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன. ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதுபோல, எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் பயணிகள் நிலையத்தில் குவிவதைத் தடுக்கும் விதமாக, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட் விநியோகம் நேற்று மாலை முதல் இன்று மாலை வரை நிறுத்தி வைக்க ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து, இந்த இரண்டு நிலையங்களில் உள்ள கவுன்ட்டர்களில் நடைமேடை டிக்கெட் விநியோகம் நிறுத்தப்பட்டது.

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in