

கொடைக்கானல்: கோடை சீசன் முடிந்தும் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் உள்ளது.
நகரில் வெயில், பனி மூட்டம் என மாறிமாறி நிலவிய தட்பவெப்ப நிலையை சுற்றுலாப்பயணிகள் நேற்று வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல் மோயர் பாயிண்ட் சுற்றுலா தலத்தில் இயற்கை எழிலை ரசிக்கத் திரண்ட சுற்றுலாப் பயணிகள். கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களான மோயர் பாயிண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், பிரையண்ட் பூங்கா ஆகிய பகுதிகளில் வாரவிடுமுறை நாட்களான நேற்று முன்தினமும், நேற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் பல இடங்களில் சுற்றுலா வாகனங்களால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்று காலை முதலே மிதமான வெயில் அடிப்பதும், சிறிது நேரத்தில் பனிமூட்டம் காணப்படுவதுமாக மாறி, மாறி நிலவிய தட்பவெப்ப நிலையை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.
கோடை சீசன் முடிந்த நிலை யில் சுற்றுலாப் பயணிகள் வருகை இனி குறைந்துவிடும் என நினைத்திருந்த சிறு வியாபாரிகள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்தனர்.