Published : 06 May 2016 07:12 AM
Last Updated : 06 May 2016 07:12 AM

திமுக - காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெறச் செய்தால் தமிழகத்தில் செயல்படுகிற அரசை தருவோம்: சென்னை தீவுத்திடல் பிரச்சாரக் கூட்டத்தில் சோனியா காந்தி உறுதி

தமிழகத்தில் செயல்படுகிற ஒரு அரசாங்கத்தை திமுக காங்கிரஸ் கூட்டணி அளிக்கும் என்று சென்னை தீவுத்திடலில் நேற்று நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார்.

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது:

இந்தியாவின் மூத்த அரசியல் வாதியான கருணாநிதியுடன் மேடையை பகிர்ந்து கொள்வது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெயில் காலத்திலும் லட்சக்கணக் கில் திரண்டிருக்கும் மக்களை பார்க்கும்போது எனது மகிழ்ச்சி அதிகரிக்கிறது. தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெள்ளம் ஏற்பட்டதால் பேரழிவு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் தங்க ளின் வீடு வாசல்களையும், வாழ் நாள் முழுக்க சம்பாதித்த பொருட் களையும் இழந்தனர். நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.

அப்போது, அதிமுக அரசு எங்கே சென்றது என்று தெரியவில்லை. அதிமுக அரசு மக்களுக்கு உதவவில்லை. மக்கள்தான் மக்களுக்கு உதவினர். அத்தகைய கொடுமையான நேரத்தில் அரசாங்கம் எங்கே போன தென்று தெரியவில்லை. மக்களின் கண்ணீரைத் துடைக்கத் தவறிய அதிமுக அரசு, அத்தியாவசிய பொருட்கள் எதையும் வழங்க வில்லை.

வெள்ளத்துக்கான இழப்பீடு களை நான்கு வாரத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய நிதியமைச்சர் கூறினார். ஆனால், 4 மாதங்கள் ஆகிவிட்ட பிறகும் இழப்பீட்டுத் தொகை முழுமையாக கிடைக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்தில் தற்போது குடிநீர் பற்றாக்குறை உள்ளது. விவசாயிகளின் நிலம் காய்ந்து கிடக்கிறது. வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2011 வரை திமுக ஆட்சி நடந்தபோது ஒவ்வொரு நாளும், புதிய புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கின்றனர். அதிமுக ஆட்சி யில் தமிழகம் எந்த வளர்ச்சியை யும் காணவில்லை. 3 வருடங் களுக்கு முன்பு காங்கிரஸ் தலைமை யிலான ஐ.மு.கூட்டணி அரசு, நிலம் கையகப்படுத்தும் சட்டம் என்னும் மகத்தான சட்டத்தை கொண்டுவந்தது. அந்த சட்டத்தில் விவசாயிகளின் ஒப்புதல் அடிப் படையில் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்ற அம்சத்தை திருத்திவிட்டார்கள்.

தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றால் அவர்கள் கடத்தப்படு கின்றனர். தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படு கின்றன. அவர்களை பாதுகாக்காத மத்திய அரசு, வெளி நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக் கிறது. தமிழகத்தில் சமூக நீதி திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், தாழ்த்தப் பட்டவர்கள், பெண்கள், சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள வர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.

தமிழக பிரச்சினைகள் குறித்து மத்திய பாஜக அரசிடம் எதுவும் கேட்டுப் பெறாத அதிமுக, நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதிமுக பாஜக இடையே ரகசிய கூட்டணி உள்ளதுதான் இதற்கு காரணம். திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று சொன்னதால் ஏராளமான பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுவிலக்கு கொண்டு வருவோம் என்று நாங்கள் அறிவித்ததை அடுத்துதான், தமிழக முதல்வர் வேறு வழியின்றி படிப்படியாக மதுவிலக்கு என்று கூறும் நிலைக்கு வந்துள்ளார்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் செயல்படுகிற ஒரு அரசாங்கத்தை தருகிறோம். தமிழகத்தை வளர்ச்சியடைந்த மாநிலமாக மாற்றுவோம். விவசாயிகள், நெசவாளர்கள், பெண்கள் என அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். எனவே, எங்கள் கூட்டணியை தமிழக மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x