Published : 20 Jun 2022 06:24 AM
Last Updated : 20 Jun 2022 06:24 AM
தூத்துக்குடி: கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட தூத்துக்குடி- கோவை இணைப்பு ரயில் இன்னும் இயக்கப்படாமல் இருப்பதால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக தொழில் நகரமாக தூத்துக்குடி விளங்கி வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பெரும்பாலானவை கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து தான் வருகின்றன.
எனவே, ஏற்றுமதியாளர்கள், வர்த்தகர்கள் வசதிக்காக தூத்துக்குடி- கோவை இடையே ரயில் இயக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சியினரின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து தூத்துக்குடி- கோவை இரவு நேர இணைப்பு ரயில் கடந்த 2011 முதல் இயக்கப்பட்டது.
01.07.2011 முதல் நாகர்கோவில்- கோவை விரைவு ரயிலில், தூத்துக்குடி- கோவை இணைப்பு ரயில் மணியாச்சி சந்திப்பில் இருந்து இணைக்கும் வண்ணம் இயக்கப்பட்டது. இந்த இணைப்பு ரயிலில் 1 ஏசி பெட்டி உள்ளிட்ட 6 பெட்டிகள் முதலில் அறிமுகம் செய்யப்பட்டன. பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2012-ம் ஆண்டு கூடுதலாக ஒரு படுக்கை வசதி பெட்டி இந்த ரயிலில் இணைக்கப்பட்டது.
பயணிகள் பாதிப்பு
தூத்துக்குடி- கோவை இணைப்பு ரயில் (வண்டி எண் 22669, 22670) மிகவும் சிறப்பாக கடந்த 2020-ம் ஆண்டு வரை இயங்கி வந்தது. வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டதால் இந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டது.
கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பெரும்பாலான ரயில்கள் தற்போது மீண்டும் இயக்கப்பட்டுவிட்டன. ஆனால், தூத்துக்குடி- கோவை இணைப்பு ரயில் இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கத்தின் செயலாளர் மா.பிரம்மநாயகம் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் கரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்ட 90 சதவீத ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி- கோவை இணைப்பு ரயில் மற்றும் குருவாயூர்- சென்னை விரைவு ரயிலுடன் இணைத்து இயக்கப்பட்ட தூத்துக்குடி- சென்னை பகல் நேர இணைப்பு ரயில் ஆகியவை இன்னும் இயக்கப்படாமல் உள்ளது.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை நேரிடையாகவும், கடிதங்கள் மூலமாகவும் கோரிக்கை விடுத்தும் எந்த பதிலும் வரவில்லை. இணைப்பு ரயில்கள் தேவையில்லை என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. தூத்துக்குடி – கோவை – தூத்துக்குடி இரவு நேர ரயிலாக இருப்பதால் அதனை தனியாக இயக்க வேண்டும். அது வரை இணைப்பு ரயிலாக பழைய நடைமுறைப்படி இயக்க வேண்டும்.
மேலும், திருநெல்வேலி – பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். பாலருவி விரைவு ரயில் பெட்டிகளை வைத்து தூத்துக்குடி – திருநெல்வேலி ரயிலாக குருவாயூர் - சென்னை – குருவாயூர் பகல் நேர ரயிலுக்கு வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இணைப்பு கொடுத்து விட்டு திருநெல்வேலி சென்றடையும் வகையில் இயக்க வேண்டும்.
இதுபோல் மாலையில் திருநெல்வேலி – தூத்துக்குடி ரயிலாக புறப்பட்டு சென்னை – குருவாயூர் ரயிலுக்கு வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் தூத்துக்குடி பயணிகளுக்கு இணைப்பு கொடுத்து தூத்துக்குடி வந்து சேருமாறு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT