Published : 20 Jun 2022 06:02 AM
Last Updated : 20 Jun 2022 06:02 AM
திருவண்ணாமலை: அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்காலத்தை இழக்க வேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார்.
அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 27 இளைஞர்கள், தனி வாகனத்தில் நேற்று முன் தினம் இரவு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம் ஆரணியில் நடைபெற்றது. கோட்டாட்சியர் கவிதா தலைமை வகித்தார். வட்டாட்சியர் பெருமாள், காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் பேசும்போது, “அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டம் வன்முறையாக மாறிவிட்டது. இதில், இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
எந்த பிரச்சினைக்கு வன்முறை தீர்வு ஏற்படாது. அறப்போராட்டம் செய்பவர்கள்தான், தமிழக இளைஞர்கள். வன்முறைகளில் ஈடுபடமாட்டார்கள். அக்னி பாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போராட்டத்தில் பங்கேற்காமல், தமிழக இளைஞர்கள் அமைதிக்காக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் நடத்த விரும்பினால், காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்பி, போராட்டத்துக்கு இளைஞர்கள் ஆதரவு கொடுக்க வேண்டாம். பிரச்சினை குறித்து முழுமையாக தெரியாமல் பங்கேற்க வேண்டாம். நாட்டின் சொத்து இளைஞர்கள் தான். வதந்திகளை நம்பி, பிரச் சினையில் சிக்கிக்கொண்டு எதிர்காலத்தை இழக்க வேண்டாம்.
ராணுவம், கடற்படை, விமான படை உள்ளிட்ட அரசு துறைகளில் வேலைக்கு செல்லும்போது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இருந்து நற்சான்று பெறுவது அவசியம். போராட்டத்தில் ஈடுபட்டு, வழக்குகளில் சிக்கிக் கொண்டால் மத்திய, மாநில அரசுகளில் வேலையில் சேர முடியாத நிலை ஏற்பட்டுவிடும். வேலைவாய்ப்பு தொடர்பான உதவிகள் மற்றும் சந்தேகங்கள் ஏற்பட்டால் காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT