Published : 19 Jun 2022 10:44 AM
Last Updated : 19 Jun 2022 10:44 AM

மேகதாது அணை விவகாரம்: எஸ்.கே ஹல்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: வேல் முருகன் வலியுறுத்தல்

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர் நாடகாவுக்கு ஆதரவாக செயல்படும் எஸ்.கே ஹல்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறும்போது, “காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என்றும் அக்கூட்டத்தில் மேகதாது அணை குறித்தும் விவாதிக்கப்படும் என்று ஆணையம் கூறி இருந்தது. இதனையடுத்து, மேகதாது அணை பற்றி விவாதம் கூடாது என்று தமிழ்நாடு அரசு எதிர்ப்புத் தெரிவித்ததுடன், உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தது. இதனிடையே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் ஜூன் 23 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இச்சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நிர்மல்குமார் மற்றும் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்கள், மேட்டூர் அணை மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்கே ஹல்தர், ஜூன் 23-ம் தேதி நடைபெறும் ஆணையக் கூட்டத்தில், மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், டெல்டா மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் பாலைவனமாகும். காவிரி குடிநீரை நம்பியுள்ள பல்வேறு மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

காவிரியின் குறுக்கே தடுப்பு அணை அமைப்பதற்கு தமிழ்நாட்டின் இசைவைப் பெற வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் இருக்கிறது. மேகதாது அணை திட்டத்தையும் தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்தும் வருகிறது. இதனை பொருட்படுத்தாமல், மேகதாது அணை குறித்து விவாதிக்கப்படும் என்று எஸ்.கே ஹல்தர் கூறுவது கண்டனத்துக்குரியது.

காவிரி உரிமைச் சிக்கலில், ஒன்றிய அரசு சட்டத்துக்குப் புறம்பாகவும், நடுநிலை தவறியும், கர்நாடகத்துக்குப் பக்கச் சாய்வாகவே இதுவரை செயல்பட்டு வந்துள்ளது. அது காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பா.ஜ.க அரசாக இருந்தாலும், தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனைச் செய்வது தான் அக்கட்சிகளின் பணி.

தற்போது அக்கட்சிகளின் பணியை காவிரி மேலாண்மை ஆணையத் தலைவராக இருக்கும் எஸ்.கே.ஹெல்தர் செம்மையாக செய்கிறார். அவருக்கு பக்கத்துணையாக மோடி அரசும் நிற்கிறது.

எஸ்.கே.ஹெல்தர் ஒன்றிய அரசின் நீராற்றல் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில்தான் கர்நாடக அரசிடம் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து அனுப்புமாறு இவரே கேட்டு வாங்கி, அதற்கு அனுமதி கொடுத்து, அதை காவிரி மேலாண்மை ஆணைய அனுமதிக்கு அனுப்பி வைத்தார். இப்படிப்பட்டவரிடம் நேர்மையை எதிர்ப்பார்ப்பது நமது முட்டாள் தனம்.

எனவே, மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க அனைத்து விதமான சதிகளிலும் ஈடுபட்டு வரும் எஸ்.கே.ஹெல்தரை, காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து நீக்க மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேகதாது திட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டங்களை துரிதப்படுத்த வேண்டும். மத்திய தலைமை அமைச்சர்(பிரதமர்) மற்றும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, நமது தரப்பு நியாயத்தை தமிழ்நாடு அரசு எடுத்துரைக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x