ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் - இரு தரப்பிலும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை

ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் - இரு தரப்பிலும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை
Updated on
2 min read

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடையே இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில், இருதரப்பு ஆதரவாளர்களும் கடும் மோதலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், கட்சியின் மூத்த தலைவர்களான தம்பிதுரை, கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்டோர் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

சென்னை வானகரத்தில் வரும் 23-ம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் தொடர்பாக, மாவட்டச் செயலர்கள் மற்றும் கட்சித் தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பெரும்பாலானோர், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என வலியுறுத்தினர். இதை ஓபிஎஸ் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர், தங்கள் ஆதரவாளர்களுடன் கடந்த 14-ம் தேதி முதல் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஐந்தாம் நாளான நேற்றும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பசுமைவழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர், தங்கள் வீடுகளில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அண்மையில்தான் தேர்தல் நடத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில், ஒற்றைத் தலைமை தேவையில்லாததது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில், அவர்களுடன் பணியாற்றிய 14 பேரைக் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழு எடுக்கும் முடிவுகளை மட்டும் செயல்படுத்தும் பதவியாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் இருக்க வேண்டும்” என்று தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார். ஆனால், இபிஎஸ் தரப்பு நிலைப்பாடு குறித்து, பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், கட்சியின் மூத்ததலைவரான தம்பிதுரை நேற்றுமுன்தினம் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை சந்தித்து, ஆலோசனை நடத்தினார். அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக எம்ஜிஆர் காலத்து மூத்த தலைவரான கே.ஏ.செங்கோட்டையன் இருவரிடையே சமரசப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார். நேற்று முதலில் பழனிசாமியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய அவர், தொடர்ந்து பன்னீர்செல்வத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின் மீண்டும் பழனிசாமியை சந்தித்துப் பேசினா்.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறும்போது, “14 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவின் கீழ் இரட்டைத் தலைமை என்பதில் ஓபிஎஸ் உறுதியாக இருக்கிறார். ஆனால், இபிஎஸ் ஒற்றைத் தலைமை என்பதில் உறுதியாக இருக்கிறார். இருவரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளனர்.

அதனால்தான் 5 நாட்களாக நடத்தி வரும் பேச்சுவார்த்தையில், சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. தான் சமரசம் செய்தும், இருவரும் சமாதானமாகவில்லை என்று தம்பிதுரை வருந்தியதாக கூறப்படுகிறது” என்றனர்.

இதற்கிடையே, பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் தயாரிப்பு தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் நேற்று கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்று, ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்துக்கு இபிஎஸ் ஆதரவாளரான டி.ஜெயக்குமார் வந்தபோது, அவருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமெழுப்பினர். அதற்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்களும் கோஷமிட்டனர். இதனால் கட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், ஓபிஎஸ் ஆதரவு மகளிர் அணியினர் உள்ளிட்டோர், ஜெயக்குமாரின் ஆதரவாளரான பெரம்பூர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தினர். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து இரு தரப்பினரிடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இந்தக் கூட்டத்தில், நீட் தேர்வு ரத்து, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசுஅனுமதிக்கக் கூடாது, திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகக் கூறி, திமுக அரசுக்கு கண்டனம், காவல்நிலைய மரணங்களைத் தடுக்கக் கோருதல் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்த பிறகு வெளியில் வந்த சி.பொன்னையன், “கூட்டம் சுமுகமாக முடிந்தது. இரட்டைத் தலைமை என்ற பொருள் குறித்து தீர்மான தயாரிப்பின்போது ஆலோசிக்கப்படவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in