Last Updated : 19 Jun, 2022 07:40 AM

 

Published : 19 Jun 2022 07:40 AM
Last Updated : 19 Jun 2022 07:40 AM

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித்தொகை கிடைக்குமா? - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தி 8 மாதங்கள் கடந்தும், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த பயிற்சி மருத்துவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு இந்தியா வருவோர் எஃப்எம்ஜிஇ என்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் ஓராண்டு பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற வேண்டும். அதற்கு பிறகு, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்தால்தான் மருத்துவராகப் பணியாற்ற முடியும். ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்ற, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.3.54 லட்சம், மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது.

இந்நிலையில், இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பல்கலை.க்கான கட்டணத்தை ரூ.29,400 ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதேநேரம், ‘வெளிநாடுகளில் படித்த பயிற்சி மருத்துவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது. இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுபோல, உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்’ என அனைத்து மாநில அரசுகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியது.

இதை மேற்கோள்காட்டி, மருத்துவக் கல்வி இயக்குநரகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தல் வழங்கியது. ஆனால், 8 மாதங்கள் கடந்தும், தமிழகத்தில் ஓராண்டு பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்றும், வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை.

இதுதொடர்பாக வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் கூறியதாவது:

வெளிநாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு, இந்தியாவில் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுவோருக்கு மாதம்தோறும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் 2021 நவ. 18-ம் தேதி, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. ஆனால், தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, ‘உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். ஓராண்டு பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என்று கடந்த மார்ச் 4-ம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்தது. அதன் பின்னரும் உதவித்தொகை வழங்கவில்லை.

கடந்த மே 19-ம் தேதி தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட சுற்றறிக்கையில், ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனும், கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்ற ஒப்புதல் சான்று அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த அறிவுறுத்தலை பின்பற்றும்படி மே 26-ம் தேதி தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலும் அறிவுறுத்தியது. ஆனால், உதவித்தொகை கிடைக்கவில்லை.

எனவே, உடனடியாக உதவித்தொகை வழங்குமாறு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் மனு கொடுத்துள்ளோம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x