

மத்திய அரசின் அக்னிபாதை திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் வன்முறை மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் விரிவடைந்து நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போராட்டத்தை தடுக்கும் வகையில் அனைத்து ரயில் நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்மித் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், ரயில் நடைபாதை மற்றும் தண்டவாளம் பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இதனிடையே, அக்னிபாதை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார்.
‘அக்னிபாதை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் வெங்கடேஷன், முன்னாள் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு ரயில் நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு
இதுபோல, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் காவல் துறை மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் ரயில் தண்டவாளத்தில் முக்கிய இடங்களில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.