

நாமக்கல்: தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என அமைச்சர் நாசர் தெரிவித்தார்.
நாமக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சா. மு. நாசர் பங்கேற்றுப் பேசியதாவது: தமிழகத்தில் ஆவின் மூலம் மொத்தம் 354 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் மாநில அளவில் ஆவின் மூலம் 33 முதல் 35 லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற கடந்த ஒரு ஆண்டில் தற்போது நாள் ஒன்றுக்கு 43 லட்சம் லிட்டர்பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
முதல்வர் பால் விலையை ரூ.3 குறைத்து அறிவித்ததால் பால் விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு 26 முதல் 28 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள பாலைப் பயன்படுத்தி பால் பவுடர், பால் கோவா, நறுமணப்பால், ஸ்வீட் வகைகள் உள்ளிட்ட உபபொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஒரு கிலோ பால் பவுடர் உற்பத்தி செய்ய 12 லிட்டர் பால் தேவைப்படுகிறது. ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.32 வழங்குகிறோம். இதற்காக ரூ.384 செலவாகிறது. ஒரு கிலோ பால் பவுடர் ரூ.211க்கு விற்பனை செய்கிறோம். போக்குவரத்து செலவைக் கணக்கிட்டால் ஒரு கிலோ பால் பவுடருக்கு ரூ.40 வீதம் நஷ்டம் ஏற்படுகிறது.
தமிழக ஆவினுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. ஆண்டுக்கு ரூ.270 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இருப்பினும் தரமான பால் மற்றும் தரமான உப பொருட்களை உற்பத்தி செய்து வழங்குகிறோம். இந்நிலையில் பால் உற்பத்தி விலையை அதிகரிக்க வேண்டும் என்றும், மானிய விலையில் தீவனம் வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இது சம்பந்தமாக வரும் 27-ம்தேதி தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற உள்ள ஆய்வுக்கூட்டத்தில் ஆலோசனை செய்து முதல்வர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.