Published : 19 Jun 2022 07:55 AM
Last Updated : 19 Jun 2022 07:55 AM

தமிழகம் மீதான தாய்லாந்தின் நேசம் அசாதாரணமானது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

தாய்லாந்து துணைத் தூதரகம் மற்றும் வேர்ல்டு வைட் மீடியா கார்ப்பரேஷன் குழுமம் சார்பில் தாய்லாந்து -தமிழக நட்புறவு விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னை யில் நேற்று நடந்தது. இதில் தாய்லாந்து பொருளாதார மேம்பாட்டுக்கு சிறந்த பங்களிப்புக்கான விருதை டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனுக்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கி னார். படம்: ம.பிரபு

சென்னை: தமிழகம் மீதான தாய்லாந்தின் நேசம் அசாதாரணமானது என தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தாய்லாந்து துணைத் தூதரகம் மற்றும் வேர்ல்டு வைட் மீடியா கார்ப்பரேஷன் குழுமம் சார்பில் தாய்லாந்து - தமிழக நட்புறவு விருது வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.

தாய்லாந்து தமிழகம் இடையேயான 75 ஆண்டுகள் நட்புறவைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களித்தமைக்காக எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணுசீனிவாசன் உள்பட 40 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: எங்களது கலாசாரத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் மதிப்பு தமிழர்களை பெருமைப்படும் விதத்தில் உள்ளது. இந்த சந்தர்ப்பத்தை நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாக பார்க்கிறேன். நான் கூறும் சம்பவம் மூலம் தாய்லாந்து மக்களின் உள்ளத்தை அனைவரும் புரிந்த கொள்வீர்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு கண்ணில் வெண்புரை பாதிப்பு எனத் தெரியவந்தது. தொடர்ந்து மாவட்டம், மாநிலம் என பல நிலைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசித்தும் பலனில்லை. தொடர்ந்து கடந்த ஆண்டு நாங்கள் ஆட்சியமைத்தவுடன், முதல்வர் இந்த விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்தினார். அப்போது தான் தாய்லாந்து மருத்துவரை அணுகினால், இதற்கு தீர்வு கிடைக்கும் என்ற முயற்சியில் இறங்கினோம்.

இதற்கு துணைத் தூதரும் மிகவும் உறுதுணையாக தன்னால் இயன்றவற்றைச் செய்தார். அங்குள்ள சிறந்த மருத்துவர்கள் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது யானையின் கண்ணில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது.

திங்கள்கிழமை மதுரை செல்கிறேன். அப்போது கோயில் அதிகாரிகளுடன் அடுத்த கட்டமாக என்ன செய்வது என ஆலோசிக்க உள்ளோம். இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான். நம் மீதான அவர்களின் அன்பும் ஆதரவும் அசாதாரணமானது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x