

கம்பம் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கியதால் தமாகாவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், ஆண்டிபட்டி, பெரியகுளம் என 4 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன.இத்தொகுதி களில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 80 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கம்பம் தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதியில் கடந்த 1996, 2001-ம் ஆண்டுகளில் தமாகா வேட்பாளர் ஓ.ஆர். ராமச்சந்திரன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறையும் ஓ.ஆர்.ராமச்சந்திரன் தமாகா சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். தமாகாவின் சின்னம் தென்னந்தோப்பு. இதே தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திருச் சிங்கம் என்பவருக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு ராமச்சந்திரன் என்பவர், சுயேச்சையாக ஊஞ்சல் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
தமாகாவின் சைக்கிள் சின்னம் மாறிய நிலையில், ராமச்சந்திரன் பெயரில் சுயேச்சை ஒருவரும் போட்டியிடுவதால், வாக்காளர்கள் தென்னந்தோப்பு சின்னத்துக்கு பதிலாக பழக்க தோஷத்தில் சைக்கிள் சின்னம் அல்லது பெயரை வைத்து ஊஞ்சல் சின்னத்துக்கோ வாக்களித்து விட்டால், தங்களது வெற்றி வாய்ப்பு பறிபோகலாம் என்பதால் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும், மக்கள் நலக் கூட்டணியினரும் கலக்கம் அடைந்துள்ளனர்.
கம்பம் தொகுதி தேர்தல் அலுவலர் ராஜையா கூறியதாவது: வாக்குச் சீட்டில் வேட்பாளரின் பெயர், அவரது கட்சி சின்னம் மற்றும் புகைப்படத்தை பதிவு செய்து, அதனை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தி விடுவோம். இதனால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை என்றார்.