

அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்ற தொகுதி உடுமலைப்பேட்டை. 2011-ம் ஆண்டு தேர்தலில் பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக), தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியின் கொமுக வேட்பாளர் டி.இளம்பரிதியை 44,560 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தற்போது, ஜெயராமனுக்கு பொள்ளாச்சியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் கே.ராதாகிருஷ்ணன், அதிமுக சார்பில் உடுமலையில் போட்டியிடுகிறார். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதி. அடுத்த நிலையில் தலித்துகள், நாயுடு சமூகத்தவர்கள் உள்ளார்கள். அதிமுக வேட்பாளர் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என கட்சியினரே கூறுகின்றனர்.
பொள்ளாச்சி ஜெயராமனும் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், கடந்த முறை உடுமலை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெல்லவில்லையா? இங்கே ஜாதிக்கு இடமில்லை; சின்னம் தான் பிரதானம் என்று கூறுபவர்களும் கட்சிக்குள் உள்ளார்கள்.
திமுகவில் மு.கண்ணப்பனின் மகன் மு.க.முத்து போட்டியிடுகிறார். கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதியில் இருந்துகொண்டு, உடுமலையில் இவருக்கு வாய்ப்பு அளித்ததில், திமுக உள்ளூர் நிர்வாகிகளிடம் கடும் எதிர்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் மீறி, பிரச்சாரத்தில் முன்னேறி கொண்டிருக்கிறார் மு.க.முத்து.
அதேசமயம், மக்கள் நலக் கூட்டணி ஆதரவுடன் நிற்கும் தேமுதிக வேட்பாளர் செ.கணேஷ்குமார், யு.கே.பி.என்.கந்தசாமி (பாஜக) ஆகியோர் பிரிக்கும் வாக்குகள், திமுகவுக்கே மிகப்பெரிய பாதகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
அவ்வளவாக அறிமுகமில்லாதவராக வலம் வரும் தேமுதிக வேட்பாளரை, கம்யூனிஸ்ட்கள் அரவணைத்து செல்வதை காண முடிகிறது. இவரது அரசியல் களமும், போராட்டக் களங்களும் சொல்லும்படியாக இல்லை எனக் கட்சியினரே கூறுகின்றனர்.
இந்து முன்னணி அமைப்பின் முன்னாள் மாநில துணைச் செயலாளராக இருந்தவர் தான் பாஜக வேட்பாளராக உள்ள யு.கே.பி.என்.கந்தசாமி. இவரும், கொமதேக வேட்பாளர் சி.ரகுபதி ராகவனும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கவுண்டர் சமூக வாக்குகளை பிரிக்கும்போது, கே.ராதாகிருஷ்ணன் (அதிமுக) வெற்றிக்கு நெருங்கி வருவதையும் காண முடிகிறது.
உடுமலை மத்தியப் பேருந்து நிலைய விரிவாக்கம், தினசரி சந்தை, வாரச்சந்தை மேம்பாடு, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். இணைப்புச் சாலைகள் ஏற்படுத்த வேண்டும். நகரின் விரிவாக்கப் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை, தேவையான இடங்களில் சுரங்க நடைபாதைகள், கல்வி வளர்ச்சிக்காக அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும்.
உடுமலையை கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். நலிவுற்ற பஞ்சாலைகளை செயல்படுத்த வேண்டும். நவீன வேளாண்மை மூலமாக தரம் உயர்த்த வேண்டும்.
தக்காளி, மக்காச்சோளம் அதிக அளவில் விளைவதால், அவற்றில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிக்க தேவையான தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பதே உடுமலை தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.