

ராணுவ வீரர்களுக்கென சென்னை இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்.) தயாரிக்கப்பட்ட மூன்று குளிரூட்டப்பட்ட நவீன ரயில் பெட்டிகள் ராணுவத்தின் பயன்பாட்டுக்காக நேற்று ஒப்படைக்கப்பட்டன.
சென்னையில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் ராணுவ வீரர்கள் பயணம் செய்வதற்கான பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளை ராணுவத்திடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், இணைப்புப் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் முன்னிலையில் லெப்டினன்ட் ஜெனரல் ஜக்பீர் சிங் ரயில் பெட்டி களின் இயக்கத்தை கொடியசைத் துத் தொடங்கி வைத்தார்.
பின்னர், இதுகுறித்து தொழிற்சாலையின் பொது மேலாளர் அசோக் கே.அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:
ராணுவ வீரர்களுக்கு நவீன வசதிகளுடன்கூடிய 40 ரயில் பெட்டிகளையும், 32 உணவு தயாரிக்கும் சமையலறை பெட்டிகளையும் (பேன்ட்ரி கார்) ரூ. 250 கோடி மதிப்பீட்டில் தயார் செய்வதற்கான அனுமதியை ராணுவ அமைச்சகம் எங்களுக்கு அளித்துள்ளது. மே 24-ம் தேதி (நேற்று) ஒப்படைக்கப்பட்ட 3 பெட்டிகளையும் சேர்த்து இதுவரை மொத்தம் 17 குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகள் தயார் செய்து ராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது
இதில், 46 பேர் படுத்து செல்லும் வகையில் குளிர்சாதனம், தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளும் உள்ளன.
அதேபோல, வரும் ஜூலை மாத இறுதிக்குள் மீதமுள்ள ரயில் பெட்டிகளை தயார் செய்து ராணுவத்துக்கு அளிக்கப்படும். மேலும், 32 பேன்ட்ரி கார்கள் தயார் செய்வதற்கான பணிகள் வரும் ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதம் நிறைவடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நவீன வசதிகள்
ரயில் பெட்டியின் சிறப்பு வசதிகள் குறித்து இணைப்புப் பெட்டி தொழிற்சாலையின் துணை தலைமை இயந்திர பொறியாளர் சீனிவாசன் கூறும்போது, “இதற்கு முன்பு கடந்த 2002-ம் ஆண்டு ராணுவத்துக்கு ரயில் பெட்டிகள் தயாரித்து அளிக்கப்பட்டன. அதன்பிறகு, தற்போதுதான் இணைப்புப் பெட்டி தொழிற்சாலையிலிருந்து ராணுவத்துக்கு ரயில் பெட்டிகள் தயாரித்து அளிக்கப்படுகின்றன.
ராணுவ வீரர்கள் அவசர காலங்களில் பாதுகாப்புடன் பயணம் செய்யும் வகையில், முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இந்த பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பெட்டியை தயார் செய்வதற்கு 45 நாட்கள் ஆகும். இந்தப் பெட்டியில் நவீன கழிப்பறை, குளியலறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், “ஈக்கள் கேட்சர்', எல்.இ.டி விளக்கு, இசை ஒலிபரப்புச் சாதனம், தகவல் தொடர்பு கருவி, ராணுவ அதிகாரிகளுக்கான அலுவலக அறை, கோப்புகள் வைக்கும் பெட்டி, ராணுவ வீரர்களுக்கான தனித்தனி வைப்பறை, செல்போன் சார்ஜ் செய்யும் வசதி, வழுக்காத தரைதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன” என்றார்.