Published : 18 Jun 2022 03:55 PM
Last Updated : 18 Jun 2022 03:55 PM

“ஒற்றைத் தலைமை கோரிக்கை ‘சிதம்பர ரகசியம்’ கிடையாது” - தீர்மானக் குழு கூட்டத்துக்குப் பின் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று.

சென்னை: "ஒற்றைத் தலைமை குறித்து கட்சிதான் முடிவு செய்யும். என்னைப் பொறுத்தவரை தொண்டர்களின் மனநிலையை உள்ளங்கை நெல்லிக்கனி போல மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், இங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், சிதம்பர ரகசியம் ஒன்றும் கிடையாது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அடங்கிய பொதுக்குழு தீர்மானக் குழுக் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

முன்னதாக, கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டம் தரைதளத்திலும், தீர்மானக்குழுவின் கூட்டம் முதல் தளத்திலும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இன்று மூன்றாவது கட்டமாக தீர்மானக் குழு, அதாவது, கடந்த 11, 16 மற்றும் 18-ம் தேதிகளில் கூடி தீர்மானங்கள் இறுதிவடிவம் பெற்றுள்ளது. இது கட்சியின் ஒருங்கிணைப்பாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

அதிமுக ஒரு மாபெரும் இயக்கம். முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்டுப்பாட்டில் ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட மாபெரும் இயக்கம். இந்தக் கட்சி ஆரம்பித்து 50 ஆண்டுகள், பொன்விழா காணும் வேளையில், இவர்கள் இருவரது ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும், சமூக பொருளாதார ரீதியாக ஏற்றம் பெற்றார்கள். எனவே அதுதொடர்பான கருத்துகள் தீர்மானத்தில் வரவேண்டும் என்று கூறப்பட்டது.

அதே போல், திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்த நிலையில், குறிப்பாக மக்கள் விரோதப் போக்கை, ஜனநாயக விரோதப்போக்கை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும், தோலுரித்துக் காட்ட வேண்டும் என்ற வகையிலும் தீர்மானங்கள் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.

ஒற்றைத் தலைமை குறித்து கட்சிதான் முடிவு செய்யும். என்னைப் பொறுத்தவரை தொண்டர்களின் மனநிலையை உள்ளங்கை நெல்லிக்கனி போல மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், இங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், சிதம்பர ரகசியம் ஒன்றும் கிடையாது. நான் சிதம்பர ரகசியத்தையா போட்டு உடைத்தேன்.

நான் சொன்னது, கண்ணுக்குத் தெரியாமல், அடிமட்டத்திலிருந்து கொண்டு இந்த இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிற கிளைக்கழக தொண்டனுடைய எண்ணம், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதிபலித்தது. அதைதான் நானும் சொன்னேன், பெரும்பான்மையானவர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறுகின்றனர் என்று சொன்னேன். இதில் என்ன தவறு உள்ளது. இதில் தவறேதும் கிடையாது" என்றார்.

உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுகிறவன் ஜெயக்குமார் கிடையாது. நான் அடிமட்ட தொண்டனாக இருந்து, கட்சியிலும், ஆட்சியிலும் ஜெயலலிதா எத்தனையோ பொறுப்புகள் கொடுத்து அழகுபார்த்தார். எனக்கு பதவி வெறி கிடையாது. அடிமட்டத் தொண்டனாக இருந்து அதிமுகவை காத்து, திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துச்சொல்பவனாக கண்டிப்பாக இருப்பேன்" என்றார்.

இபிஎஸ் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு, "இன்று நடந்த கூட்டத்தைப் பொறுத்தவரை 12 பேர் கொண்ட குழு. இந்தக் குழுதான் தீர்மானங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் குழு, அதற்கான கூட்டம் நடந்தது. ஓபிஎஸ் கூட்டத்திற்கு வந்தார். ஏன் இபிஎஸ் வரவில்லை என்று கேட்கமுடியாது.ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனையெல்லாம் செய்யவில்லை. மாவட்டச் செயலாளர்கள் கருத்து சொல்வார்கள். அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x