Last Updated : 18 Jun, 2022 05:04 PM

 

Published : 18 Jun 2022 05:04 PM
Last Updated : 18 Jun 2022 05:04 PM

“ஆர்எஸ்எஸ், பாஜகவின் திட்டமிட்ட சதிதான் இந்த அக்னி பாதை திட்டம்” - நாராயணசாமி கருத்து

நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: அக்னி பாதை திட்டத்தால் ஏற்பட்டுள்ள கலவரம், வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலங்களுக்கும் பரவும் என்றும், அத்திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ள அக்னி பாதை என்ற திட்டத்தில் பல கேள்விகள் எழுப்பப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மோடி அரசு ராணுவத்துக்கு ஆட்களை நியமிக்கவில்லை. இப்போது ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. அக்னி பாதை திட்டத்தின் மூலம் 75 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பும் இத்திட்டம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வடமாநிலங்கள் பற்றி எரிகின்றன. இத்திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் தெருவில் இறங்கி போராடுகிறார்கள். இது நியாயமான போராட்டம்.

பல ரயில்கள் எரிக்கப்படுகின்றன. 170-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பீகாரில் துணை முதல்வருக்கே பாதுகாப்பு இல்லை. பாஜக தலைவரின் வாகனம், பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. பாஜக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வெளியே செல்ல முடியவில்லை. இப்படி நாட்டில் மிகப்பெரிய கலவரம் நரேந்திர மோடியின் திட்டத்தால் ஏற்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பு நாக்பூரில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் பேருக்கு பயிற்சி கொடுக்கிறது. அங்கு அவர்கள் தடியை வைத்து கொண்டு பயிற்சி பெறுகிறார்கள். இப்போது 75 சதவீதம் பேருக்கு ராணுவ பயிற்சி கொடுத்து வெளியே அனுப்பிவிட்டால் அவர்களது சேவையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆர்எஸ்எஸ், பாஜக திட்டமிட்டு செய்கிற சதிதான் இந்த அக்னி பாதை திட்டம். ஏற்கெனவே தடியை எடுத்தவர்கள் இப்போது துப்பாக்கி எடுக்கும் நிலையை பாஜக உருவாக்குகிறது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த அக்னி பாதை திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லாவிடில் இந்தக் கலவரம் வடமாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கும் பரவும்.

இளைஞர்களின் உணர்வுகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் நான் முதல்வராக இருந்தபோது, முழு பட்ஜெட் போட முடியாத அரசு, ஆட்சியாளர்களுக்கு திறமையில்லை என்று எதிர்க்கட்சி தலைவராக இருந்த ரங்கசாமி கூறினார். ஆனால் இப்போது மத்தியில் பாஜக ஆட்சியும், புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியும் உள்ளது. அப்படி இருந்தும் ஏன் காலத்தோடு ரங்கசாமி பட்ஜெட் போடவில்லை. ஏன் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறவில்லை.

பாஜகவுக்கும், என்ஆர் காங்கிரஸுக்கும் ஏதாவது விரிசல் ஏற்பட்டுள்ளதா? மத்திய அரசு கோப்பை திருப்பி அனுப்புகிறதா? அல்லது புதுச்சேரி பாஜகவினர் ஒப்புதல் கொடுக்காமல் தடுத்து நிறுத்த சொல்லி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்களா? கடந்தாண்டும் ரங்கசாமி முழு பட்ஜெட்டை போடவில்லை. இந்தாண்டும் முழு பட்ஜெட்டை போடவில்லை. எனவே, காங்கிரஸ் ஆட்சியை குறை சொன்ன ரங்கசாமி, இப்போது முழு பட்ஜெட் போடாததற்கான காரணத்தை மக்களிடம் விளக்கமாக கூற வேண்டும்.

ஏற்கெனவே தமிழகம், கேரளா, ஆந்திராவில் இருப்பவர்கள் புதுச்சேரியில் குடியேறினார்கள். இந்த நிலை தற்போது தலைக்கீழாக மாறியுள்ளது. புதுச்சேரியில் உள்ளவர்கள் ரேஷன் கார்டை ரத்து செய்துவிட்டு தென்மாநிலங்களுக்கு குடியேறுகிறார்கள். அதற்கு காரணம், நாம் கொடுத்து வந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டிருப்பது தான். குறிப்பாக, மாநில அரசு சார்பில் 20 கிலோ அரிசி வழங்க ஓராண்டுக்கு ரூ.294 கோடி நிதி ஒதுக்கப்படும்.

தற்போது இந்தத் திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, புதுச்சேரியில் இருந்து மக்கள் மற்ற மாநிலங்களில் குடியேறுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரண்பேடிக்கு எதிராக நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தினோம். அராஜகம் செய்யவில்லை. ஆனால், கிரண்பேடி மத்திய பாதுகாப்பு படையை வரவழைத்தால் அரசின் நிதி 2.13 கோடி செலவாகியுள்ளது. இதற்கு கிரண்பேடி, மத்திய உள்துறை அமைச்சகம், மோடி, அமித் ஷா ஆகியோர்தான் பொறுப்பு" என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x