Published : 18 Jun 2022 01:49 PM
Last Updated : 18 Jun 2022 01:49 PM

‘அக்னி பாதை’யால் எழுந்த கிளர்ச்சி இனி மாபெரும் புரட்சியாக வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது: திருமாவளவன்

சென்னை: "அக்னி பாதை என்னும் இந்து விரோத - வெகுமக்கள் விரோத ஆளெடுப்புத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், பிற மாநிலங்களிலும் இந்தக் கிளர்ச்சி மாபெரும் புரட்சியாக வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது" என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "வேலைவாய்ப்பின்றி அல்லாடும் கோடி கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் 'அக்னி பாதை' என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

குறிப்பாக, நான்காண்டுகளுக்காக மட்டுமே என படைக்கு ஆளெடுத்து அவர்களை அக்னி வீரர்களென பயிற்சியளித்துப் பிறகு வீட்டுக்கு அனுப்புவது என்கிற இத்திட்டம், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாழும் பல கோடி இளைஞர்களின் கனவைச் சிதைப்பதாகவுள்ளது. எனவே இந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம்.

வேலை வாய்ப்பின்மையால் விரக்தியடைந்த இளைஞர்கள் வெடித்தெழும் தீயாய் வெகுண்டெழுந்து போராடி வரும் இன்றைய சூழலில், ஏற்கெனவே தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை உடனே அறிவித்திட மோடி அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

'ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்’ என்று 2019- நாடாளுமன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அவரது எட்டாண்டு கால ஆட்சியில் பல கோடிபேர் இருந்த வேலையையும் பறிகொடுத்துவிட்டு வேலையற்றவர்களாக மாறி அல்லலுறும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம் 23.5% ஆக இருந்தது. இப்போது பிரேசில், வங்கதேசம் முதலான நாடுகளைவிடவும் மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய ரயில்வே துறை, தபால் துறை, வரி வருவாய்த் துறை மற்றும் ராணுவத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 8.72 லட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக 2020-இல் நாடாளுமன்றத்தில் மோடி அரசு அறிவித்தது. அவற்றை நிரப்புவதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் மோடி எடுக்கவில்லை. அந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இப்போது 10 லட்சமாக உயர்ந்துவிட்டது.

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இந்நேரத்தில், வேலை இல்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்களிடையே ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பை புரிந்துகொண்டே, இந்திய ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் எனத் தெரிகிறது. 17 வயதைத் தாண்டியவர்கள் ராணுவத்தில் சேரலாம்; ஆனால், அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே வேலை தரப்படும்; பின்னர் 21 வயதில் அவர்கள் ராணுவ சேவையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதுதான் மோடி அரசு அறிவித்திருக்கிற திட்டம்.

இதனால், இளைஞர்கள் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பை இழப்பார்கள். எந்தத் திறனும் இல்லாதவர்கள் ஆக்கப்படுவதால் அதன் பிறகு அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்காது. ஆயுள் முழுவதும் வேலைவாய்ப்புக்குத் தகுதியற்றவர்களாக, கல்வித் தகுதி இல்லாதவர்களாக அவர்கள் ஆக்கப்படுவார்கள். இந்த சதியை உணர்ந்து தான் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் முதலான வட மாநிலங்களில் இளைஞர்கள் வெகுண்டெழுந்து தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் ஆவேசத்தில் ஏராளமான ரயில்கள் தீக்கிரையாகி வருகின்றன. சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டுவருகிறோம் என்னும் பெயரில் பாஜக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இப்போது தென் மாநிலங்களுக்கும் இந்த ஆவேச அறப்போர் நீதி கேட்கும் நெருப்பாகப் பற்றிப் பரவுகிறது.

'இந்துக்களுக்கு நாங்கள் மட்டுமே ஆயுள்கால குத்தகைப் பாதுகாவலர்கள்' என்று பறைசாற்றிக் கொள்ளும் சங்பரிவார்கள், அதே இந்துக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சிபீடத்தில் அமர்ந்து கொண்டு, தற்போது தமக்கு வேண்டிய ஒருசில கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் தாரை வார்க்கும் தரகு வேலையை மோடி அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், இந்துக்களின் பாதுகாவலரான மோடி அரசின் அக்னி பாதை திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் யார்? அவர்கள் சொல்லும் அதே 'சாட்சாத் இந்துச் சமூகத்தைச்' சார்ந்த இளைஞர்கள் தான் என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. ஓட்டு வாங்குவதற்கு மட்டும் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டு இந்து இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியம் ஆக்கிக்கொண்டிருக்கிற 'கார்ப்பரேட் தரகு அரசின் ' சதித் திட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு புரிந்துகொண்டதால் தான் இன்று அவ்விளைஞர்கள் தெருவில் இறங்கி உள்ளனர். இந்து - முஸ்லிம் என்ற பிரிவினையை மூட்டி அதில் குளிர் காயலாம் என்கிற பாசிச பாஜகவின் கனவு இனி பலிக்காது என்பதை இந்தப் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

எனவே, 'அக்னி பாதை' என்ற மோசடி திட்டத்தை உடனடியாக மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்பவேண்டும். அத்துடன், தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல எஞ்சியுள்ள இந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அக்னி பாதை என்னும் இந்து விரோத - வெகுமக்கள் விரோத ஆளெடுப்புத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், பிற மாநிலங்களிலும் இந்தக் கிளர்ச்சி மாபெரும் புரட்சியாக வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது. மேலும், இதுவே மோடியின் கார்ப்பரேட் தரகு ஆட்சியை 2024-இல் தூக்கி எறிவதற்கு வழிவகுப்பதாகவும் அமையும் என்பதையும் சுட்டிக்காட்டி எச்சரிக்க விரும்புகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x