Published : 11 May 2016 06:13 PM
Last Updated : 11 May 2016 06:13 PM

திராவிடக் கட்சிகளால் பண்பாட்டிலும் தமிழகம் கடைசி இடம்: ராமதாஸ் பட்டியல்

திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகள் தான் வளர்ச்சியிலும், பண்பாட்டிலும் தமிழகத்தை கடைசி இடத்திற்கு தள்ளியுள்ளன என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் இரு தீமைகளை பட்டியலிட்டால் முதலிடத்தில் இருப்பது ஊழல், இரண்டாவது இடத்தில் இருப்பது மது ஆகும். இவ்விரு தீமைகளையும் உரம் போட்டு வளர்த்தவை தமிழகத்தை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் அதிமுகவும், திமுகவும் தான்.

1967ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வரும் வரை ஊழல் என்ற வார்த்தையை தமிழக மக்களில் பெரும்பான்மையானவர்கள் கேள்விப்பட்டது கூட கிடையாது. அதற்கு முந்தைய ஆட்சிகள் மீது ஊழல் புகார்கள் சுமத்தப்பட்ட போதும் அவை எடுபடவில்லை. 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்ததுடன், இரு பிரதமர்களை தேர்ந்தெடுத்தவருமான காமராஜர் உயிரிழக்கும் போது அவரிடம் இருந்தவை ரூ.100 பணமும், 10 கதர் வேட்டி சட்டைகளும் தான் என்பதிலிருந்தும், 10 ஆண்டுகள் உள்துறை அமைச்சராக இருந்த கக்கன் அவரது கடைசி காலத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் மக்களுடன், மக்களாக சிகிச்சை பெற்றுக் கொண்டவர் என்பதிலிருந்தும் அவர்களின் நேர்மையை உணர்ந்து கொள்ள முடியும்.

அண்ணா முதல்வரான பின் அவரது அமைச்சர்கள் சிலர் விதிமீறலில் ஈடுபட்டனர் என்ற போதிலும், அவர் ஊழல் புகாருக்கு ஆளாகாமலேயே பதவி வகித்து மறைந்தார். அவருக்கு பின் கருணாநிதி முதல்வர் ஆனதும் ஊழலும் சிம்மாசனம் ஏறியது. அவர் மீதான 28 ஊழல் புகார்களை விசாரித்த நீதிபதி சர்க்காரியா ஆணையம், ''அனைத்து புகார்களும் உண்மை தான். ஆனால், அவற்றுக்கு ஆதாரம் இல்லாத வகையில் விஞ்ஞான முறையில் ஊழல் செய்துள்ளனர்'' என்று கூறி கருணாநிதியின் ஊழலை அம்பலப்படுத்தினார்.

அதன் பரிணாம வளர்ச்சி உலகமே வியந்த ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஊழல், ரூ.780 கோடி ஏர்செல், மேக்சிஸ் ஊழல், 20 அமைச்சர்கள் மீது சொத்துக்குவிப்பு வழக்கு என ஊழலின் உச்சத்தைத் தொட்டது. 2ஜி ஊழலில் திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் ஒன்றரை ஆண்டுகளும், கருணாநிதியின் மகள் 6 மாதங்களும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் திமுக ஊழலின் அழிக்க முடியாத சான்றுகளாகும்.

அதிமுகவின் ஊழல்கள் திமுகவுக்கு சற்றும் குறையாதவை. மாதம் ஒரு ரூபாய் ஊதியம் பெற்ற ஜெயலலிதா அன்றைய மதிப்பில் ரூ.66.65 கோடிக்கும், இன்றைய மதிப்பில் ரூ.10,000 கோடிக்கும் சொத்து குவித்தது ஓர் ஊழல் அதிசயம். ஜெயலலிதா முதல் 5 ஆண்டுகளில் செய்த ஊழலைவிட அடுத்த 10 ஆண்டுகளில் செய்த ஊழல் 100 மடங்கு அதிகமாகும். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதற்காக இருமுறை பதவி நீக்கப்பட்ட முதல்வர், இருமுறை சிறையில் அடைக்கப்பட்டவர் என்ற பெருமை அவருக்கு மட்டுமே உண்டு. அதிமுக, திமுக ஆகிய இரு ஆட்சிகளிலும் கிரானைட், தாது மணல், என இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சுருக்கமாக கூறினால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் கடந்த 10 ஆண்டுகளில் செய்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.70 லட்சம் கோடிக்கும் அதிகம்.

மதுவை எடுத்துக் கொண்டால், 1948 ஆம் ஆண்டில் ஓமந்தூரார் அவர்களால் விரட்டியக்கப்பட்ட மது அரக்கனை 23 ஆண்டுகளுக்கு பிறகு அழைத்து வந்து விருந்து வைத்ததன் மூலம், ஒரு தலைமுறையாக மதுவைப் பார்க்காத இளைஞர்களை சீரழித்தவர் கருணாநிதி. ஜெயலலிதாவோ இன்னும் ஒருபடி மேலேபோய் மதுக்கடைகளை அரசுடைமையாக்கி, அரசே மதுவிற்கும் அவலத்தை உருவாக்கியவர். ஊருக்கு ஊர் விதவைகளை உருவாக்கி, இந்தியாவில் அதிக இளம் விதவைகள் கொண்ட மாநிலம் என்ற அவப்பெயரை தேடித்தந்தது இவர்கள் தான்.

ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழப்பு, ரூ.2.20 லட்சம் கோடி உற்பத்தி இழப்பு என வளர்ச்சியிலும், பண்பாட்டிலும் தமிழகத்தை கடைசி இடத்திற்கு தள்ளியுள்ளனர்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x