

சேலம்: இந்தியாவில் 5 மீன்பிடி துறைமுகங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் திட்டத்தில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன் வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன்,நேற்று சேலம் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு, கடந்த 8 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது.
2014- ம் ஆண்டுக்கு முன்னர் கழிப்பிட தேவை குறித்து பேசுவது தயக்கமாகவே இருந்தது ஆனால், பாஜக ஆட்சியில் அனைத்து பள்ளிகளுக்கும், ஏழை மக்களின் வீடுகளுக்கும் கழிப்பிடம் கட்டி கொடுத்து இருக்கிறோம்.
மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களிலும், தமிழகத்தில்தான்அதிக எண்ணிக்கையில் பயனாளிகள் உள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கையால் சிறிய நகரங்களும் விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதல் முறையாக, தமிழகத்தில் கடல்பாசி சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது. ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் அமைக்க, தமிழகம், உத்தரப்பிரதேசம் என 2 மாநிலங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
இந்தியாவில், 5 மீன்பிடி துறைமுகங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் திட்டத்தில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் குறிப்பிட்ட பலவாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. அவற்றை நிறைவேற்றுவதற்கு திமுக முன்வர வேண்டும். தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், கொலைகள் அதிகரித்துள்ளன. ஆளுநர் குறித்து திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் விளம்பரத்துக்காக பேசி வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.