

திருப்பூர்: அக்னிபாதை என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ரயில்களுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிந்து வரும் நிலையில், ரயில் நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முழுமையான சோதனைக்குப் பிறகே ரயில் நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
வஜ்ரா உள்ளிட்ட வாகனங்களும் ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, “திருப்பூரில் வசிக்கும் வட மாநிலத்தவர்களும் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையத்தை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீஸாரும் ,ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவு போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்றனர்.