Published : 18 Jun 2022 07:08 AM
Last Updated : 18 Jun 2022 07:08 AM
திருவள்ளூர்: குழந்தைகளின் ஆரோக்கியத்தை அங்கன்வாடி பணியாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் என சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அக்குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடுகளில் இருந்து மேம்படுத்தும் விதமாகஏற்படுத்தப்பட்டுள்ள ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தின் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், சமூகநலம் மற்றும் மகளிர்உரிமைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் இயக்குநர் வி.அமுதவல்லி ஆகியோர் பங்கேற்றனர்.
ஆய்வுக் கூட்டத்தில் ஷம்பு கல்லோலிகர் பேசியதாவது: சிறப்பு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் கடுமையான, மிதமான ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவ உதவிமற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்துஅவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஒருமாத காலத்துக்கு நடைபெற்றன. இதன்மூலம், சிறப்பு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படும் குழந்தைகளின் விவரங்கள் சிறப்புசெயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளின் அவசியத்தை அவர்களது பெற்றோருக்கு தெளிவுப்படுத்த வேண்டும். குழந்தைகள் மையத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை அங்கன்வாடி பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.
பின்னர், திருவள்ளூர் அரசுபொது மருத்துவமனை மற்றும்பூந்தமல்லியை அடுத்த நேமம் குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் மருத்துவ பரிசோதனை முகாம்களை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் அரசு வத்சன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் லட்சுமி முரளி, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.கே.லலிதா, மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT