

தேர்தல் காலங்களில் அதிருப்தியாளர்கள் மாற்றுக்கட்சிக்கு மாறுவது சகஜமான ஒன்றுதான். ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம் கோவை திமுகவின் முன்னோடியாக விளங்கிய சி.டி.தண்டபாணியின் மகன் சி.டி.டி.ரவி சப்தமேயில்லாமல் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த சி.டி.தண்டபாணி கோவை மாவட்ட திமுகவில் மு.கண்ணப்பனுக்கு இணையாக விளங்கியவர். மூன்று முறை எம்பியாகவும், ஒரு முறை எம்எல்ஏவாகவும் பதவி வகித்தவர். வைகோ தலைமையை மு.கண்ணப்பன் ஏற்று மதிமுகவுக்கு சென்றபோது, கோவை திமுகவுக்கு தூணாக விளங்கியவர். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மதிமுகவுக்கு சென்ற நிலையில் இவருக்கு மிகவும் ஜூனியராக இருந்த பொங்கலூர் பழனிச்சாமி கட்சி மாவட்ட செயலாளர் ஆக்கப்பட்டார். பின்பு, கோவையில் சிடிடி கோஷ்டி, பொங்கலூர் கோஷ்டி என இரண்டு அணிகள் கொடி கட்டிப்பறந்தன. அதில் சிடிடி அணியைச் சேர்ந்தவர்களே மிகுதியாக இருந்ததும், இருதரப்புக்கும் உரசல்கள் தொடர்ந்ததும் திமுகவில் அப்போதைய பரபரப்பான செய்திகள்.
தற்போது கோவையில் கோவை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் வீரகோபால் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் சி.டி.தண்டபாணியால் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள்தான். அப்படிப்பட்ட கட்சி முன்னோடியான சி.டி.தண்டபாணிக்கு 4 மகன்கள், ஒரு மகள். அதில் சி.டி.டி.ரவி, சி.டி.டி.பாபு ஆகியோர் திமுகவிலேயே தொடர்ந்து அங்கம் வகித்து வந்தார்கள்.
சி.டி.டி.ரவி 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் கோவை மாநகராட்சியில் 26-வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக் கப்பட்டார். 1996-ல் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவராகவும் இருந்தார். பிறகு கட்சியின் பகுதிக்கழக செயலாளர், வட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.
கடந்த ஆண்டு கட்சி மாநிலக் குழுவில் இடம்பெறுவார் என்று பேசப்பட்டது. அப்படி எதுவும் நடக்கவில்லை. அதன்பிறகு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாமலே இருந்து வந்தார். இந்த தேர்தலின்போது கூட இவரது தம்பி சி.டி.டி.பாபு கோவை வால்பாறை தொகுதிக்கு சீட் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், இவர் எங்கும் சீட் கேட்காமல் இருந்தார்.
இந்த நிலையில் ‘மே 1-ம் தேதி கோவையில் நடக்கும் ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டத்தில், திமுக முக்கிய பிரமுகர் ஒருவர் அதிமுகவில் இணையப் போகிறார்’ என்ற தகவல் உலாவியது. இது தவிர நீலகிரியில் தொகுதி ஒதுக்கீட்டில் பகிரங்கமாக போராட்டம் செய்த முன்னாள் அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன் தலைமையில் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் பேசப்பட்டது. ஆனால் யாருமே எதிர்பாராத வண்ணம் ஜெயலலிதா முன்னிலையில் பலர் இணைய அந்தக்கூட்டத்தோடு கூட்டமாக சி.டி.டி.ரவியும் இணைந்ததைக் கண்டு திமுகவினரே ஆச்சரியப்பட்டனர்.
இது குறித்து கோவை திமுக பிரமுகர்கள் சிலர் கூறும்போது, ‘சி.டி.டி.ரவி அதிமுகவில் இணையப்போவதை நாங்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. சி.டி.தண்டபாணி இருந்த காலத்திலேயே அரசியலில் எந்த லாபமும் ஈட்டாதவர். அமைதியான அரசியலுக்கு பெயர் போனவர். கோஷ்டி அரசியலைக் கண்டு ஒதுங்கியிருந்தார். இப்படி யாருக்குமே சொல்லாமல் சென்று அதிமுகவில் இணைந்துவிட்டார். இளித்துரை ராமச்சந்திரனை பொறுத்தவரை ஸ்டாலின் வந்து நேரில் பேசி அவரை சரிப்படுத்திவிட்டார். அவருக்கு மாநில பொறுப்பு ஒன்று அளிப்பதாக வாக்குறுதி தரப்பட்டுள்ளது. அவர் தலைமையில்தான் ஆயிரக்கணக்கானவர்கள் அதிமுகவில் இணைவார்கள் என்று எதிர்பார்த்தோம். அப்படி எதிர்பார்த்தது நடக்காமல். எதிர்பாராதது இப்போது நடந்துள்ளது. சி.டி.டி.யின் அடையாளமாக விளங்கிய சி.டி.டி.ரவி கட்சியை விட்டுப்போனது எங்களுக்கெல்லாம் வருத்த மளிக்கிறது’ என்றனர்.
இது குறித்து சி.டி.டி. ரவியிடமே கேட்டபோது, ‘நான் கட்சியை விட்டு விலகியதற்கு எந்த காரணத்தையும் சொல்ல விரும்பவில்லை. 8 மாதங்களுக்கு முன்பே அதிமுகவில் இணைவது என்று முடிவு எடுத்துவிட்டேன். அதை வெளியே சொல்லவில்லை. சொன்னால் என் மனதை மாற்ற நண்பர்கள் சிலர் முயற்சிக்கலாம். அது எதற்கு? ’ என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.