Published : 25 May 2016 10:49 AM
Last Updated : 25 May 2016 10:49 AM

டாஸ்மாக் பணம் ரூ.40 லட்சம் கொள்ளையடிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள்: துப்பு கொடுத்தால் பரிசு என போலீஸார் அறிவிப்பு

கொளத்தூரில் டாஸ்மாக் பணம் ரூ.40 லட்சத்தை கொள்ளையடிக்க முயன்றவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்துள்ளனர். அவர்கள் கொள்ளை யடிக்க முயற்சி செய்யும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வசூலான பணத்தை மொத்தமாக வசூல் செய்து, டாஸ்மாக் நிறுவன வங்கி கணக்கில் செலுத்தும் பணியை ஒரு தனியார் நிறுவனம் செய்து வருகிறது. கடந்த மாதம் 25-ம் தேதி மாலையில் ஒரு மினி வேனில் பணம் வசூலிக்கும் பணியாளர் அனகாபுத்தூரை சேர்ந்த மோகன் (25) டாஸ்மாக் கடைகளில் பணத்தை வசூலிக்க வந்தார். பணத்தின் பாதுகாப்புக்கு தனியார் நிறுவன காவலாளி ஆவடி மிட்டினமல்லியை சேர்ந்த ராஜேந்திரன்(53) என்பவரும் உடனிருந்தார். வேனை அண்ணா நகர் நடுவாங்கரையை சேர்ந்த வினோத்குமார் (30) ஓட்டிவந்தார்.

கொளத்தூர் செந்தில் நகர் 200 அடி சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் பணத்தை வசூலிக்க, வேனில் இருந்து இறங்கி மோகன் நடந்து சென்றார். பல டாஸ்மாக் கடைகளில் வசூலித்த பணம் ரூ.40 லட்சம் வேனில் இருந்தது. அதன் பாதுகாப்புக்காக காவலாளி ராஜேந்திரன், ஓட்டுநர் வினோத்குமார் ஆகியோர் வேனி லேயே இருந்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், ராஜேந்திரன் மற்றும் வினோத் குமார் மீது மிளகாய் பொடி தூவி, வேனில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் ராஜேந்திரன் கொள்ளை யர்களை தடுக்க முயன்றார். ஆத்திரம் அடைந்த கொள்ளையர் கள் கையில் வைத்திருந்த அரிவாளால் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டினர்.

உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் வினோத்குமார் வேனில் இருந்து இறங்கி, கதவுகளை ரிமோட் கன்ட்ரோல் மூலம் பூட்டி விட்டு, சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டார். வேனின் கதவுகளை உடைக்க முடியாததாலும், பொதுமக்கள் கூடியதாலும் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியை கைவிட்டு அந்த கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராஜமங்கலம் போலீஸார், ராஜேந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மறுநாள் காலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

கொள்ளை முயற்சியில் கொலை செய்த 3 பேரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன. அந்த பகுதிகளில் சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. கொள்ளையர்கள் இதுவரை சிக்காத நிலையில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான கொள்ளையடிக்கும் காட்சிகளை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் தெரிபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையர் 9498139759, காவல் ஆய்வாளர்கள் 9498127225, 9498111585, காவல் கட்டுப்பாட்டு அறை 044-23452377 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x