Published : 15 May 2016 09:50 AM
Last Updated : 15 May 2016 09:50 AM

கச்சத்தீவில் புதிய தேவாலயம் அமைக்கும் முயற்சியை தடுக்கவேண்டும்: கருணாநிதி, வைகோ வலியுறுத்தல்

கச்சத்தீவில் புதிய தேவாலயம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக கருணாநிதி நேற்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோயில் திருவிழாவில் தமிழகம், இலங்கை யைச் சேர்ந்த மக்கள் கலந்துகொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலை யில், இலங்கை கடற்படைத் தளபதி ரவீந்திர விஜயகுணவர்த்தனாவிடம் கத்தோலிக்கத் திருச்சபை விடுத்த கோரிக்கையினையொட்டி, அங்கு புதிய கோயிலுக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாக இலங் கைக் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்கள் கச்சத் தீவில் உள்ள அந்தோணியார் கோயிலுக்குச் செல்லலாம் என்றும், தங்களுடைய வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் செல்லலாம் என்று ஒப்பந்தத்தில் இருந்தாலும் அதை இலங்கை அரசு திட்டமிட்டு புறக்கணித்து வருகிறது. இந்நிலையில் புதிய தேவாலயம் அமைப்பதை விட ஏற்கெனவே உள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தை விரிவு படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. எனவே புதிய கட்டுமானத்தைத் தவிர்த்து, பழைய தேவாலயத்தையே விரிவுபடுத்தி, புதுப்பித்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படை தளபதி ரவீந்திர விஜயகுணரத்னே வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவில் புதிய தேவாலயம் அமைக்கவும் அப்பகுதியை முழுமையாக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளார். இலங்கை அரசு கச்சத்தீவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைப்பதன் நோக்கம், கச்சத்தீவை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்துக்கொள்வதுடன், தமிழக மீனவர்கள் அங்கு செல்வதை தடுப்பதும்தான் என்பது திட்டவட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது.

எனவே, கச்சத்தீவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கும் இலங்கை அரசின் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்துவதுடன், 1974-ம் ஆண்டு செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x