Published : 17 Jun 2022 05:14 PM
Last Updated : 17 Jun 2022 05:14 PM

பெரம்பலூர் மாவட்டத்தில் இடநெருக்கடியால் வாசகர்கள் அவதி: இடவசதி இல்லாத நூலகங்கள் விரிவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நூலகங்கள், போதிய இடவசதி இல்லாமல் நெருக்கடியில் இயங்கி வருகின்றன. அவற்றை விரிவுபடுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழக அரசின் பொது நூலகத் துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட மைய நூலகம், வேப்பந்தட்டையில் முழு நேர நூலகம் மற்றும் 18 கிளை நூலகங்கள், 24 ஊர்ப்புற நூலகங்கள், 42 பகுதி நேர நூலகங்கள் இயங்கி வருகின்றன.

இதில், மாவட்ட மைய நூலகம் உட்பட பெரும்பாலான நூலகங்களில், போதிய இடவசதி இல்லாததால், வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து சமூகநீதி படைப்பாளர்கள் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் இ.தாகீர் பாட்சா கூறியது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நூலகங்களில் போதிய இடவசதி இல்லை. குறிப்பாக, வேப்பந்தட்டை நூலகத்தில் 50 ஆயிரம் நூல்கள், இணைய வசதியுடன் கூடிய 6 கணினிகள், நகல் எடுக்க ஜெராக்ஸ்இயந்திரம், பிரிண்டர் ஆகியவை உள்ளன.

வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக இங்கு இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், போதிய இடவசதி இல்லை. இதனால், சுமார் 20 ஆயிரம் நூல்கள் வகைப்பிரித்து அடுக்கி வைக்கப்படாமல் கட்டுகளாகவே உள்ளன. இதனால், புதிய நூல்களைத் தேடும் வாசகர்களாலும், போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களாலும் புதிய நூல்களை வாசிக்க முடியாத நிலை உள்ளது.

மேலும், வாசகர்கள் அமர்ந்து வாசிக்கவும் இடப் பற்றாக்குறை உள்ளதால், தற்போது இந்த நூலகத்துக்கு வாசகர்கள் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. மேலும், மழைக் காலத்தில் நூலகக் கட்டிடத்தில் நீர்க்கசிந்து, நூல்கள் சேதமடைந்து வருகின்றன.

இந்த நூலகம் மட்டுமின்றி எசனை, லாடபுரம், வேப்பூர், குன்னம், அரும்பாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கிளை,ஊர்ப்புற நூலகங்களின் நிலையும் மோசமாக உள்ளது. எனவே, நூலகங்களை விரிவுபடுத்தி, புதிய நூல்களை வகைப்படுத்தி அடுக்கி வைக்கவும், வாசகர்கள் அமர்ந்து வாசிக்கவும் தேவையான நடவடிக்கைகளை நூலகத் துறை உடனடியாக எடுக்க வேண்டும்.

மிகவும் சேதமடைந்த பழைய நூல்களை ஆய்வு செய்து, அவற்றை கழிக்க மாவட்ட நூலகர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்தப் பணியை விரைவுபடுத்தினாலே ஓரளவுக்கு புதிய நூல்களுக்கான இடப் பற்றாக்குறையை சரி செய்யலாம்.

நூலகங்களை விரிவுபடுத்தவும், கூடுதல் கட்டிடங்களைக் கட்டவும் சட்டப்பேரவை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பெறுவதற்கு நூலகத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, அனைத்துத் தரப்பு மக்களுக்குமான நூல்களை மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் இரா.சந்திரசேகரன் (பொறுப்பு), ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: நூலகங்களில் இடப் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக பெரம்பலூர் எம்எல்ஏ ம.பிரபாகரன் நிதியுதவியில் புதிதாக ஒரு ஷெட் அமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, வேப்பந்தட்டை நூலகத்தை விரிவுபடுத்தி கட்டிடம் கட்ட ஆலோசித்து வருகிறோம். நூலகத் துறையிடம் போதிய நிதி இல்லை.

எனவே, மக்கள் பிரதிநிதிகள், நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து பங்களிப்பைப் பெற்று, கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x