

தமிழக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக எஸ்.செம்மலை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிண்டி ஆளுநர் மாளிகையில் பகல் 1.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்மலைக்கு ஆளுநர் கே.ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
6-வது முறையாக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதா பகல் 12.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு 1.10 மணிக்கு கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்ற முதல்வர் செம்மலை பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்டப்பேரவை தற்காலிக தலைவராக பொறுப்பேற்ற செம்மலை, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் 6 ஆயிரத்து 282 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
70 வயதாகும் செம்மலை 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 2001 முதல் 2004 வரை சுகாதாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2009 மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் வெற்றி பெற்றார். சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற அனுபவம் மிக்கவர்.