Published : 17 Jun 2022 04:40 AM
Last Updated : 17 Jun 2022 04:40 AM
சென்னை: கோயில்கள், கோயில் மண்டபங்களில் திருமணம் செய்துகொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு கோயில் நிதியில் இருந்து புத்தாடைகள் வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
‘கோயில்களில் நடைபெறும் திருமணத்தைப் பொருத்தவரை, மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால், அவர்களது திருமணத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால், மண்டபத்துக்கான பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்’ என்று 2021-22 சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு டிச.8-ம் தேதி தொடங்கி வைத்து, மணமக்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.
இத்திட்டத்தின் கீழ் கோயில்கள் மற்றும் கோயிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடக்கும் மாற்றுத் திறனாளிகள் திருமணங்களில் மணமக்களுக்கு கோயில் சார்பில் புத்தாடைகள் வழங்க வேண்டும். இதற்கான நிதியை கோயில் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்ய கோயில் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT