Published : 17 Jun 2022 06:20 AM
Last Updated : 17 Jun 2022 06:20 AM

அதிமுகவில் என்னை ஓரம்கட்ட முடியாது - ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டம்

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை இப்போதைக்கு தேவையில்லை என்றும் கட்சியில் இருந்து என்னை யாரும் ஓரம்கட்ட முடியாது என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் கடந்த 3 நாட்களாக தனித்தனியாக ஆலோசித்து வந்தனர். இந்நிலையில், சென்னையில் ஓபிஎஸ்ஸும், சேலத்தில் பழனிசாமியும் நேற்று ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்குப் பிறகு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:

அதிமுகவில் தனிப்பட்ட முறையில் மாவட்டச் செயலாளர்களோ, எம்எல்ஏக்களோ கூடி, பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கவோ, நீக்கவோ முடியாது. பொதுச்செயலாளர் பதவி என்பது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இது ஒவ்வொரு அதிமுக தொண்டனின் அடிப்படை உரிமையாக எம்ஜிஆரால் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பொதுச் செயலாளர் என்ற பொறுப்பு அவருக்கு மட்டுமே உரித்தானது என கருதி, இரட்டைத் தலைமை உருவாக்கப்பட்டது.

இரட்டைத் தலைமை என்றால், கட்சி நடவடிக்கைகளில் 2 பேருமே கையெழுத்திட வேண்டும் என கூறினார்கள். நானும் ஏற்றுக் கொண்டேன். கட்சி இணைய வேண்டும் என்ற தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளித்து 2 பேரும் இணைந்தோம். இபிஎஸ் முதல்வராக, நான் துணை முதல்வராக பணியாற்றினோம். ஆனால், முதல்வருக்கு உள்ள எந்த பிரத்யேக அதிகாரமும் துணை முதல்வருக்கு கிடையாது. துணை முதல்வர் என கையெழுத்து வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். அதிகாரம் இல்லாத பதவி என்றாலும், துணை முதல்வர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதன் காரணமாக அதையும் ஏற்றுக்கொண்டேன்.

எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. இந்த ஒற்றைத் தலைமை சர்ச்சை ஏன் உருவாகியுள்ளது என எனக்கே தெரியவில்லை. தொண்டர்களை பாதுகாக்க மட்டுமே இந்த இயக்கத்தில் இருக்கிறேன். ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாக இருக்கிறோம். ஒற்றுமையோடு இருக்க வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் இது போன்ற பிரச்சினை தேவையா என தெரியவில்லை.

இதுவரை இபிஎஸ்ஸிடம் ஒற்றைத் தலைமை தொடர்பாக பேசியதே இல்லை. இதுவரை எந்த பிரச்சினையும் இன்றி இரட்டைத் தலைமை சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

ஜெயலலிதா ஒற்றைத் தலைமையாக, பொதுச்செயலாளராக இருந்தார். அந்த பதவி அவருக்கு மட்டுமே உரித்தானது என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பொதுச்செயலர் பதவிக்கு இனி யாரும் வரக்கூடாது என தீர்மானமே போடப்பட்டுள்ளது. அப்பதவியை மீண்டும் யாருக்காவது கொடுக்கும் சூழல் வந்தால், ஜெயலலிதாவுக்கு பொதுக்குழு மூலம் கொடுத்த உயர்ந்த மரியாதை காலாவதியாகும் சூழ்நிலையை நாமே உருவாக்கியது போல ஆகிவிடும். இது ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

எத்தனையோ பிரச்சினைகளுக்கு இபிஎஸ் என்னை அழைத்திருக்கிறார். நான் போய் கருத்து கூறி இருக்கிறேன். இதில் எந்த ஈகோவும் இல்லை. கட்சி எந்த நேரத்திலும் பிளவுபடக் கூடாது என்பதுதான் எனது நிலைப்பாடு.

ஒற்றைத் தலைமை என்ற கருத்து, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. இன்றைய சூழலில் ஒற்றைத் தலைமை தேவையில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்தல் மூலம் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டது. தேர்தல் அறிவித்து, தேர்தல் ஆணையராக சி.பொன்னையன் நியமிக்கப்பட்டு, நாங்கள் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

அதன்பிறகு ஊரகம், பேரூராட்சி, நகராட்சி கிளைக் கழகங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அது குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் வைக்க வேண்டும் என்ற மரபு இருப்பதால், பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒற்றைத் தலைமையை நடைமுறைப்படுத்த முயற்சிப்பது தேவையில்லாதது. ஒற்றைத் தலைமை என்ற தீர்மானம் கொண்டுவர எங்கள் இருவரின் ஒப்புதலும் அவசியம். இல்லாவிட்டால் அந்த தீர்மானத்தை கொண்டுவர முடியாது. ஒற்றைத் தலைமை தேவையா என்பதை இபிஎஸ்தான் சொல்ல வேண்டும். அதிமுகவில் என்னை யாரும் ஓரம்கட்ட முடியாது. ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகும்படி என்னை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது.

நாங்கள் ஒற்றுமையாக இருப்பதற்கான சில கோரிக்கைகளை கட்சியின் மூத்த தலைவர்களிடம் சொல்லி இருக்கிறோம். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் இணைந்து ஒரு முடிவை எடுத்துவிட்டோம் என்றால் பொதுக்குழுவில் இந்தப் பிரச்சினை எழ வாய்ப்பில்லை. எம்ஜிஆர் காலத்தில் அவருடன் இருந்து கட்சியை உருவாக்கியவர்கள், ஜெயலலிதாவுடன் இருந்து கட்சியை வளர்த்தவர்கள் என 14 பேர் கொண்ட, மூத்த கட்சியினரைக் கொண்ட உயர்மட்டக் குழு உருவாக்க வேண்டும். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர்கள் முடிவெடுத்து எங்களுக்கு அளிக்கும் பட்சத்தில், அதை மட்டுமே ஒப்புதல் அளிக்கக்கூடிய ஒருங்கிணைப்பாளர்களாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறோம்.

இந்தப் பிரச்சினை எப்படி, யாரால் வந்தது என்பதை நாங்கள் இருவரும் பேசி கண்டிக்க வேண்டும். எதுவும் வெளியில் வரக்கூடாது என்று கூறியிருந்த நிலையில், ஜெயக்குமார் பேட்டி கொடுத்ததுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம். நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து சென்றதற்கு தொண்டர்கள்தான் காரணம். கட்சி சிறு பின்னடைவை சந்திக்ககூட ஓபிஎஸ் காரணமாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் அத்தனை நிலைகளிலும், அனைத்தையும் விட்டுக்கொடுத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x