

கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அவர் அதிமுக வேட்பாளர் ஜே.சி.டி. பிரபாகரனை விட 37 ஆயிரத்து 730 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சைதை துரைசாமி போட்டியிட்டார். கடந்த தேர்தலில் இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. இதனால் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் பலத்த இழுபறி ஏற்பட்டது. இந்த தேர்தலில் ஸ்டாலினுக்கு 68 ஆயிரத்து 677 வாக்குகளும், சைதை துரைசாமிக்கு 65 ஆயிரத்து 943 வாக்குகளும் கிடைத்தன. இறுதியில், ஸ்டாலின் 2 ஆயிரத்து 734 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிக வாக்கு வித்தியாசம்
இந்நிலையில், இத்தேர்தலில் 2-வது முறையாக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஜே.சி.டி. பிரபாகர் களம் இறங்கினார். இத்தேர்தலில் அவர் எளிதாக வெற்றி பெறுவார் எனக் கூறப்பட்டது. அதற்கேற்றார்போல் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் ரவுண்டில் இருந்தே ஸ்டாலின் முன்னிலையில் இருந்தார். ஒவ்வொரு சுற்றிலும் அவர் ஆயிரம் முதல் 2 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
இறுதிச் சுற்றுகள் முடித்த பிறகு அவருக்கு 91 ஆயிரத்து 303 வாக்குகள் கிடைத்தன. ஜே.சி.டி.பிரபாகருக்கு 53 ஆயிரத்து 573 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் ஸ்டாலின் 37 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம், 2-வது முறையாக இத்தொகுதியை தக்க வைத்துக் கொண்டார்