Published : 17 Jun 2022 06:38 AM
Last Updated : 17 Jun 2022 06:38 AM

அதிமுகவின் ஒற்றுமை, எதிர்கால நலன், வளர்ச்சிதான் முக்கியம்: முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் கருத்து

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்து வரும் நிலையில், கட்சி ஒன்றாக இருக்க வேண்டும்; இன்றைய சூழலில் கட்சியின் வளர்ச்சிதான் முக்கியம் என்று அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்கள் முதல் கடைசி நிலை நிர்வாக பொறுப்புகள் வரையிலான கட்சித் தேர்தல் முடிவுற்று, அதற்கான அங்கீகாரத்தை பெற, வரும் 23-ம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் நடக்க உள்ளன. இதற்கிடையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டத்துக்கான கருப்பொருளை தாண்டி, ‘அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை அவசியம்’ என்று சில நிர்வாகிகள் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது:

அதிமுக அமைப்பு செயலாளர் ஜேசிடி பிரபாகர்: கட்சித் தேர்தல் முடிந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தேர்தலை நடத்தி, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது. இந்தசூழலில், புதிதாக ஒரு பிரச்சினையை எழுப்புவது சரியல்ல. இரட்டை தலைமை சிறப்பாக செயல்படுகிறது.

இதே நிலை தொடர வேண்டும். கட்சியின் நலன் கருதி அவர்கள் இன்னும் ஒற்றுமை, வலிமையுடன் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு: கட்சி ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: ‘ஒற்றைத் தலைமை’ என்பது, மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் என அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுதான்.

யாருடைய மனதும் புண்படும் வகையில் யாரும் செயல்படவில்லை. ஒருமித்த கருத்தோடுதான் எந்த முடிவும் எடுக்கப்படும். அனைத்தையும் கட்சி முடிவு செய்யும். அனைத்தும் சுமுகமாக முடியும்.

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி: கடந்த 14-ம் தேதி நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 99 சதவீதம் பேர், ‘வருங்காலத்தில் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும் என்றால் கட்சிக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும். அதுதான் தொண்டர்களின் கருத்தாக உள்ளது. இந்த விஷயத்தை செயற்குழு, பொதுக்குழு தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்’ என்று பேசினர்.

ஒற்றைத் தலைமை வேண்டும் என்று விவாதிக்கப்பட்டதே தவிர, யார் தலைமை என்றெல்லாம் விவாதிக்கப்படவில்லை. அதனால், கட்சியில் பிளவு ஏற்பட வாய்ப்பு இல்லை. அதிமுகவை பிளவுபடுத்த எம்ஜிஆர், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கூறப்பட்ட கருத்துகளை அடிப்படையாக கொண்டுதான் தற்போது இந்த விவாதங்கள் நடக்கின்றன. அதை நாங்களும் பொது வெளியில் விவாதிக்க அவசியம் இல்லை. கட்சியின் எதிர்கால நலன், வளர்ச்சி சார்ந்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.

மதுரை முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா: அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றும் போது, அதிமுக சட்ட அமைப்பை மாற்றி அமைக்க முடியாதா. அதிமுக தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் பொதுக்குழுவில் சட்ட திட்டங்கள் மாற்றப்படும் எனவும், அதில்தொண்டர்கள் எதிர்பார்க்கும் ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் சிறந்த தலைவரை மற்றொரு சிறந்த தலைவர் தேர்ந்தெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்: திமுகவுக்கு மாற்று அதிமுக என்ற நிலையை தொடர்ந்து தக்கவைக்க வேண்டும். அதற்கான பணிகளை தலைமை வகுக்க வேண்டும். காலம்தான் தலைவர்களை தீர்மானிக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாறு ஏற்பட்டதால் எம்ஜிஆரை காலம் தலைமையாக்கியது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கட்சிக்கு கொண்டுவரப்பட்ட போது, இரு பிரிவினர் அவரை ஏற்கவில்லை.

கட்சி பிரிந்து இரு அணிகளாக நின்றபோது, பெருவாரியான இடங்களை பிடித்த ஜெயலலிதாவுக்கு மக்கள் வாய்ப்பு தந்தனர். கட்சித் தொண்டர்களும் உணர்ந்து கொண்டனர். அவரும் தலைவரானார். பின்னர், ஓபிஎஸ் 3 முறையும், இபிஎஸ் ஒருமுறையும் முதல்வராக இருந்தனர்.

அதிமுகவில் மட்டுமே யார் வேண்டுமானாலும் தலைவராக, முதல்வராக வரலாம் என்பது இவர்கள் இருவரும் பேசிய கருத்துகள்தான். இந்த சூழலில், கட்சியில் எம்.பி.,எம்எல்ஏ என பதவிகளை பெறாதஇளைஞர்கள், தொண்டர்களுக்கு வாய்ப்புகளை தலைவர்கள் உருவாக்க வேண்டும்.

கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். ஆளுங்கட்சியை, வேகமாகவும், வீரியமாகவும் எதிர்ப்பவர்களுககு மட்டும்தான் அடுத்த வாய்ப்பை மக்கள் தருவார்கள் என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x