

சென்னை: எம்ஜிஎம் குழுமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று 2-வதுநாளாக சோதனை நடத்தினர்.
பொழுதுபோக்கு பூங்கா, ஓட்டல், நட்சத்திர விடுதி, மதுபான தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம், தொழில் நிறுவனம், சரக்கு போக்குவரத்து உட்பட பல்வேறு நிறுவனங்களை எம்ஜிஎம் குழுமம் நடத்துகிறது.
இந்த குழுமம் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள அந்தநிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகம், உரிமையாளர் குடும்பத்தினர் வீடு, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்களில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சாலையில் உள்ளஎம்ஜிஎம் நிறுவனத்துக்கு சொந்தமான மதுபான ஆலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் 15 பேர் கொண்ட குழுவினர் நேற்று 2-வது நாளாக சோதனை நடத்தினர். இச்சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இக்குழுமம் வெவ்வேறு பெயர்களில் நிறுவனங்களை நடத்தி வரிஏய்ப்பில் ஈடுபட்டதா என, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நிறுவன நிர்வாகிகளிடமும் விசாரணை நடந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், ரொக்க பணம், நகைகள், சொத்து பத்திரங்கள், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்கள் உட்பட பல முக்கியஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
‘சோதனை முடிந்த பிறகே அதுகுறித்த முழுமையான தகவல் வெளியிடப்படும்’ என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.