Published : 17 Jun 2022 08:00 AM
Last Updated : 17 Jun 2022 08:00 AM

சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் வனவிலங்குகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் வனவிலங்குகளை தொந் தரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டால் வழக்குப் பதிவு செய்யப்படும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் - கர்நாடக மாநிலங்களை இணைக்கும், தேசிய நெடுஞ்சாலை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனப்பகுதி வழியாகச் செல்கிறது. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் மழை பெய்வதால், சாலையை ஒட்டிய திம்பம், ஆசனூர், தாளவாடி, தலமலை உள்ளிட்ட பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.

புலிகள் காப்பக சாலையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால், சாலையையொட்டிய பகுதிகளில் மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சாலையோரம் நிற்கும் யானை, மான் உள்ளிட்ட விலங்குகளை, வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்க்கின்றனர். மேலும், விலங்குகளை படம் பிடிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இவ்வாறு படம் எடுக்கும்போது, சிலர் சத்தமிடுவதால், விலங்குகள் அச்சமடைகின்றன.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் வாகனஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை கள இயக்குநர் கிருபா சங்கர் உத்தரவிட்டுள்ளார். மனிதர்களின் தேவையற்ற செயல்களால், மனித-விலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வனத்தில் அத்துமீறுவோர் மீது அபராதம் விதிப்பதோடு வழக்குப்பதிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஆசனூர் அருகே, கரும்பு ஏற்றி வந்த லாரியை வழிமறுத்த ஒற்றை யானை, கரும்புகளைச் சாப்பிடத் தொடங்கியது.

யானை தாக்கும் என்ற அச்சத்தில், ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டார். சிறிது நேரம் சாலையில் நின்றவாறே யானை கரும்புகளைச் சாப்பிட்ட நிலையில், சில கரும்புகளை எடுத்து ஓட்டுநர் போட்டதைத் தொடர்ந்து, லாரி செல்ல யானை வழிவிட்டது. திம்பம் சாலையில் கரும்புகளை ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்கள், யானைகளுக்காக சாலையோரம் கரும்பினை வீசிச் செல்லக் கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x