

ஈரோடு: தாளவாடியை ஒட்டியுள்ள ஒசூர் கிராமப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்குவாரி பகுதியில், 14-ம் தேதி சிறுத்தை தாக்கியதில் பசுமாடு இறந்தது.
இதனையடுத்து தாளவாடி வனச்சரகர் சு.சதீஷ், வட்டாட்சியர் வெ.உமாமகேஸ்வரன், வனவர் மா.பெருமாள் மற்றும் வனப்பணியாளர்கள், கல்குவாரி உரிமையாளருடன் இணைந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
ட்ரோன் கருவியைப் பயன்படுத்தி நடத்திய ஆய்வில், கல்குவாரியில் சிறுத்தை பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர். பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதாலும், அப்பகுதியில் புதர்கள் மண்டி இருப்பதாலும், சிறுத்தை பதுங்குவதற்கு ஏதுவாக உள்ளது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டறியும் வகையில், கல்குவாரி உரிமையாளர் புதர் செடிகளை அகற்ற முன்வந்துள்ளார். மேலும், முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதோடு, சிறுத்தையைப் பிடிப்பதற்காக இறையுடன் கூடிய கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
சிறுத்தை பிடிபடும்வரை, ஆடு மேய்ப்பவர்களும், தனி நபர்களும் கல் குவாரி பகுதியில் வரவேண்டாம் என கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.