

சென்னை: சிதிலமடைந்த நிலையில் உள்ள காவல் குடியிருப்புகளில் வசிக்கும் 366 காவலர் குடும்பத்தினர், 2 நாட்களில் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. இங்கு 366 காவலர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மிகவும் பழமையான இந்த குடியிருப்பில் உள்ள இரண்டு வீடுகளின் மேற்கூரை இரு தினங்களுக்கு முன் திடீரென பெயர்ந்து விழுந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்த உத்தரவில், “மேன்சன் சைட் காவலர் குடியிருப்பில் உள்ள 366 குடியிருப்புகளை ஆய்வு செய்ததில், 20 வீடுகள் மிகவும் மோசமான நிலையிலும், குடியிருப்பதற்கு தகுதியற்றதாகவும் உள்ளது தெரியவந்துள்ளது.
எனவே, அந்த 20 வீடுகளில் வசிப்பவர்களுக்கு பாதிப்பும் ஏற்படாத வகையில், தங்கள் குடியிருப்புகளை உடனடியாக காலி செய்ய வேண்டும். அதேபோல, மீதமுள்ள 346 குடியிருப்புவாசிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், குடியிருப்போர் நலன் கருதியும் 2 தினங்களில் தங்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மாற்று இடம் வழங்காமல், இரு தினங்களில் குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என்ற காவல் ஆணையரின் உத்தரவு போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.