

காஞ்சிபுரம்: கால்நடைத் துறையில் 1,189மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோவூர் கிராம ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 125 பெண் பயனாளிகளுக்கு ரூ.23.90 லட்சம் மதிப்பீட்டில் 5வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்தத் திட்டத்தை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கால்நடை பராமரிப்பு, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பேசியது: கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் வாழ்வில் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தகால்நடைகள் வழங்கும் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தப்படுகிறது. மேலும் நோய் இல்லாமல் கால்நடைகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கால்நடை மருந்தகங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆடுகளுக்கு 2 வருடம் காப்பீட்டுத் திட்டம் போடப்பட்டுள்ளது. எனவே ஆடுகளை நன்றாக பாதுகாத்து ஆடுகள் வழங்கிய அனைவரும் பண்ணையாளராக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கால்நடைத் துறையில் 1,189 கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும் கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள் உள்ளனர் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.1.21 கோடியில் மூன்று கால்நடை மருந்தகங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழக அரசு பின்தங்கியமக்களின் நலனுக்காக மருத்துவ காப்பீட்டுத் திட்டம், திருமண நிதியுதவித் திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம், பால் விலை குறைப்பு, மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடைபராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் ஆணையர் அ.ஞானசேகரன், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை ஆ.மனோகரன், குன்றத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் சரஸ்வதி மனோகரன், கால்நடை பராமரிப்புத் துறை காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநர் ப.ஜெயந்தி மற்றும் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.