Published : 17 Jun 2014 10:37 AM
Last Updated : 17 Jun 2014 10:37 AM

சென்னை பெண் டாக்டரை கொலை செய்தது எப்படி?: கைதானவர்களிடமிருந்து கிடைத்த பரபரப்பு தகவல்கள்

சென்னை பெண் டாக்டரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் கொலை செய்த விதத்தை போலீஸாரிடம் விளக்கிக் கூறினர்.

சென்னை முகப்பேரை சேர்ந்த பெண் டாக்டர் மல்லிகா (63) கடந்த 12-ம் தேதி கொலை செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் சாலை ஓரத்தில் பிணமாக கிடந்தார். இந்த கொலை குறித்து சென்னை நொளம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் கர்ணன் மற்றும் மயிலம் காவல் துறை யினர் விசாரணை நடத்தி, கொலை தொடர்பாக வீட்டு வேலைக் காரி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர்.

கொலையாளிகள் அளித்த வாக்குமூலம் குறித்து சென்னை காவல் இணை ஆணையர் சண்முகவேல் கூறியதாவது:

டாக்டர் மல்லிகாவுக்கு சொந்தமான நிலம் காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் உள்ளது. இந்த நிலத்தை விற்பது தொடர்பாக வீட்டு வேலைக்காரி சத்யாவிடம்(30) உதவி கேட்க, அவர் நில புரோக்கர்கள் பலரை மல்லிகாவிற்கு அறிமுகப்படுத் தினார். இந்நிலை யில் திண்டி வனத்தில் உள்ள ஒரு புரோக்கரை பார்ப்பதற்காக நிலப் பத்திரங்களை எடுத்துக் கொண்டு காரில் சென்றி ருக்கிறார் மல்லிகா. அவருடன் வேலைக்காரி சத்யா, திருப் போரூரை சேர்ந்த நில புரோக்கர் கணேஷ்(41) ஆகியோர் செல்ல, விருதுநகரை சேர்ந்த டிரைவர் கார்த்திக்(41) என்பவர் காரை ஓட்டினார்.

காரின் முன் இருக்கையில் டாக்டர் மல்லிகாவும், பின்னால் வேலைக்காரி சத்யா, புரோக்கர் கணேஷ் ஆகியோரும் அமர்ந்து கொண்டனர். செங்கல்பட்டை கடந்து கார் சென்றபோது பின் இருக்கையில் அமர்ந்திருந்த சத்யா வும், கணேஷும் சேர்ந்து மல்லிகா அணிந்திருந்த துப்பட்டாவை வைத்தே அவரது கழுத்தை கார் சீட்டுடன் சேர்த்து இறுக்கி கொலை செய்தனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த 35 சவரன் தங்க நகைகள், நிலப்பத்திரம், கைக்கடிகாரம் போன்றவற்றை கழற்றி எடுத்துக் கொண்டு, உடலை மயிலம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கீழே தள்ளிவிட்டு சென்றனர். பின்னர் காரை திண்டிவனம் அருகே சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

டாக்டர் கொலை செய்யப்பட்டு இருநாட்கள் கடந்த பின்னரே அவர் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

கொலை குறித்த தகவல் கிடைத் ததும் நொளம்பூர் காவல் ஆய்வா ளர் கர்ணன் தலைமையிலான போலீஸார் வீட்டு வேலைக்காரி சத்யாவின் கீழ்ப்பாக்கம் வீட்டு முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்றபோது, சத்யாவின் கணவர் செல்வம் மட்டும் இருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது எல்லா உண்மைகளையும் கூறி விட்டார்.

செல்வம் போலீஸ் பிடியில் இருப்பது தெரியாமல் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார் சத்யா. அவர் பேசும்போது, 'நான் திருப்பதி யில் இருக்கிறேன். டாக்டர் மல்லிகாவி டம் இருந்து நான் எடுத்த நகைகளை வீட்டில் துணிகளுக்கு இடையில் வைத்திருக்கிறேன். அவற்றை எடுத்துக் கொண்டு நீங்களும் திருப்பதி வந்து விடுங்கள்' என்று கூறினார்.

உடனே செல்வத்தை அழைத்துக் கொண்டு மாறுவேடத் தில் திருப்பதி சென்ற காவல் போலீஸார் செல்வத்தை சந்திக்க வந்த சத்யா, புரோக்கர் கணேஷ், டிரைவர் கார்த்திக் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நில பத்திரம், நகைகள் மீட்கப்பட்டன என்று காவல் இணை ஆணையர் சண்முகவேல் கூறினார்.

சென்னையில் காணாமல் போன டாக்டர் மல்லிகா கொலை செய்யப்பட்டு உடல் கண்டெடுக் கப்பட்ட இடம் மயிலம் என்பதால் அங்குள்ள போலீஸாரே கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் அடுத்தக் கட்ட விசாரணையையும் அவர்களே மேற்கொள்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள வேலைக்காரி சத்யா, டிரைவர் கார்த்திக், புரோக்கர் கணேஷ், சத்யாவின் கணவர் செல்வம், நகைகளை விற்க உதவி செய்த ஆதிலட்சுமி ஆகிய 5 பேரும் மயிலம் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

போலி லைசென்ஸ் வைத்திருந்த டிரைவர்

கைது செய்யப்பட்டிருக்கும் டிரைவர் கார்த்திக்கின் உண்மை யான பெயர் வெங்கடேஷ்பாபு. சென்னை அமைந்தகரையில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தபோது கார்த்திக் என்பவரின் லைசென்ஸை எடுத்து அவரது புகைப்படத்தை அகற்றி, தனது புகைப்படத்தை வைத்து, கார்த்திக் என்ற பெயரில் ஏமாற்றி வந்திருக்கிறார். டாக்டர் மல்லிகாவின் வீட்டில் இவர் 7 மாதமாக டிரைவராக பணிபுரிந்திருக்கிறார்.

நகைகளை அடகு வைத்து செலவு

டாக்டர் மல்லிகாவிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இருந்து ஒரு செயினை மட்டும் சென்னையில் ரூ.65 ஆயிரத்துக்கு அடகு வைத்து செலவு செய்துள்ளனர். நகையை அடகு வைப்ப தற்காக சத்யாவின் உறவுக்கார பெண் ஆதிலட்சுமி இவர்களுக்கு உதவியிருக்கிறார். மல்லிகாவிடம் இருந்து எடுத்த நிலப்பத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெறவும் முயற்சி செய்துள்ளனர். அதற்குள் போலீஸில் சிக்கிக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x