Published : 24 May 2016 12:35 PM
Last Updated : 24 May 2016 12:35 PM

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு: எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, அவர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவது உறுதியாகியுள்ளது.

சென்னை - அறிவாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில், திமுக சட்டப்பேரவைக் குழு துணைத் தலைவராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணைக் கொறடாவாக கு.பிச்சாண்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு, திமுக சார்பில் தமிழக சட்டப் பேரவைக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலும், பொதுச் செயலாளர் தலைமையிலும் நடைபெற்றது.

திமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்ற 89 உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தமிழக சட்டமன்றத்தில் திமுக குழு தலைவராக மு.க.ஸ்டாலினும், துணைத் தலைவராக துரைமுருகனும், திமுக கொறடாவாக சக்கரபாணியும், துணை கொறடாவாக கு.பிச்சாண்டியும் செயல்படுவார்கள் என திமுக கருணாநிதி அறிவித்தார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்டாலின் தன் முகநூல் பக்கத்தில், ''திமுக சட்டமன்ற கட்சித் தலைவராக என்னைத் தேர்வு செய்த தலைவர் கருணாநிதிக்கும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்து அளிக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றுவேன். மக்களின் பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமான முறையில் அவையில் விவாதித்து சட்ட மன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற அரும் பாடுபடுவேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்துள்ளன. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுக கூட்டணிக்கு 98 எம்எல்ஏக்கள் இருப்பதால் சட்டப்பேரவையில் கடும் சவாலை ஏற்படுத்த முடியும். எனவே, திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுபவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக முடியும். இந்நிலையில், திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

'திமுக தலைவர் கருணாநிதிக்கு வயதாகிவிட்டால் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியாது. அவர் அமர்வதற்கு ஏற்ப இருக்கை வசதியும் செய்யமாட்டார்கள். எனவே, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்' என்று திமுக தரப்பினர் தெரிவித்தனர்.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 23 இடங்களில் வென்ற திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. 29 இடங்களில் வென்ற தேமுதிக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார் என்பது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x