

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையிலுள்ள சுவாமிநாத சுவாமி கோயிலில் 13 ஆண்டுகளாக யானை இல்லாததால் வேதனையடைந்துள்ள பக்தர்கள், தமிழக அரசு இந்த கோயிலுக்கு யானை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான இக்கோயிலில் உள்ள முருகன், தந்தை சிவபெருமானுக்கு உபதேசம் செய்ததால் தகப்பன் சாமி என்று அழைக்கப்படுகிறார்.
கோயிலிலுள்ள மூலவர் சன்னதிக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள 60 படிக்கட்டு, 60 தமிழ் மாதங்களின் பெயரில் அமைத்துள்ளன.
இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில் சுவாமிநாத சுவாமியை இந்திரன் வணங்கிய பிறகு, ஹரிகேசன் என்ற அரக்கனை வென்றதால், இந்திரன் தனது காணிக்கையாக ஐராவதம் எனும் யானையை கோயிலுக்கு வழங்கியதாக புராணம் கூறுகிறது.
பல ஆண்டுகளாக இக்கோயிலில் யானை இருந்து வந்த நிலையில், 2009-ம் ஆண்டு கோயிலில் இருந்த துர்கா என்ற யானைக்கு மதம் பிடித்ததால், அறநிலையத் துறையினர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதி, துர்கா யானையை காட்டுக்கு அனுப்பினர். அதன் பின்னர் 13 ஆண்டுகளாக இக்கோயிலில் யானை இல்லாத நிலைஉள்ளது.
சுவாமிமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முருகனைதரிசனம் செய்து விட்டு, முன்மண்டபத்தில் நிற்கும் யானையை வணங்கி செல்வார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக யானை இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் யானையை வணங்க முடியாமல் வேதனையுடன் செல்கின்றனர்.
எனவே, தமிழக அரசு, சுவாமிமலை முருகன் கோயிலுக்கு யானை வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அகில பாரத இந்து ஆன்மிக பேரவை மாநில நிர்வாகி ரா.கண்ணன் கூறியது: இந்த கோயிலில் இருந்த துர்காஎன்ற யானை 6 வயதில் கோயிலுக்கு வழங்கப்பட்டது. பின்னர், அந்த யானைக்கு 15 வயதில் மதம்பிடித்ததால், தமிழக அரசின் சார்பில் யானை காட்டில் விடப்பட்டது.
அதன்பிறகு கோயிலில் யானை இல்லாத நிலையே உள்ளது. கோயிலிலுள்ள யானையை அரசிடம் ஒப்படைத்தால், வேறுயானையையோ அல்லது குட்டியையோ வழங்க வேண்டும் என்ற விதியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசிடம் கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை எதுவும் இல்லை. எனவே, தமிழக அரசு சுவாமிமலை முருகன் கோயிலுக்கு யானை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து கோயில் அலுவலர் கூறியது:கோயிலுக்கு யானை வழங்குபவர்கள் வைப்புத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என அரசின் உத்தரவு உள்ளது. அதன் பின்னர், யானையை ஒருவரும், வைப்புத் தொகையை ஒருவரும் வழங்கலாம் என மாற்றி அமைக்கப்பட்டது.
எனவே, சுவாமிமலை சுவாமி நாத சுவாமி கோயிலுக்கு யானை மற்றும் வைப்பு தொகை வழங்க பக்தர்கள் முன் வரவேண்டும். இதற்கு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.