Published : 01 May 2016 05:17 PM
Last Updated : 01 May 2016 05:17 PM

மக்கள் நலக் கூட்டணியைப் பார்த்து கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பயம்: முத்தரசன் கருத்து

சேலத்தில் வீரபாண்டி தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மோகன், சேலம் தெற்கு தொகுதி விசி கட்சி வேட்பாளர் ஜெயசந்திரன் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:

புதிய வாக்காளர்களான இளைஞர்கள் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். விவசாய சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தேர்தல் கருத்துக்கணிப்பில் அதிமுக, திமுக இவ்விரு கட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பது ஒரு பொய் தோற்றம்.

தேர்தல் ஆணையம் மற்றும் அரசு இயந்திரம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. கரூரில் அன்புநாதன் என்பவர் வீட்டில் ரூ.4 கோடி மற்றும் ரூ.10 லட்சம் கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ரூ.500 கோடி கைப்பற்றியதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே அன்புநாதன் வீட்டில் இருந்து பணம் எண்ணும் இயந்திரம் 11, கள்ள நோட்டா என கண்டறியும் இயந்திரம் ஒன்று கைப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சில கோடி ரூபாய் எண்ண, இத்தனை இயந்திரங்கள் தேவைப்படாத நிலையில், செய்திகளில் வெளிவந்துள்ளது போல ரூ.500 கோடி ரூபாய் வரை பணம் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

விஜயகாந்த் பாதுகாவலர் மீது பாய்வதும், பொது இடங்களில் நாக்கை துருத்துவதும் சாதாரண விஷயம். ஒவ்வொரு மனிதருக்கும் பிளஸ், மைனஸ் இருக்கும்.

கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடரில்கூட நத்தம் விஸ்வநாதன் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்றார். தற்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்கிறார். கருணாநிதி கூறும் பூரண மதுவிலக்கு என்பது எல்லாம் தேர்தலுக்கான பேச்சு. மக்கள் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் என உறுதிபட கூறப்பட்டுள்ளது. திமுக - அதிமுக தலைவர்கள் தேமுதிக பற்றி மேடையில் பேசாமல் இருப்பதற்கு காரணம் எங்கள் மீதான பயத்தையே வெளிக் காட்டுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x